எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் போட்டியிடுவதற்கு உதவியாக தமது இடத்தைக் காலி செய்வதற்கு ஈடாக தாம் 60,000 ரிங்கிட் கோரியதாக கூறப்படுவதை கூலிம் பண்டார் பாரு சுயேச்சை உறுப்பினர் சுல்கிப்லி நூர்டின் நிராகரித்துள்ளார்.
முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் சையட் ஹுசேன் அலி, ‘அரசியல் போராட்டத்தின் நினைவலைகள்’ என்னும் தலைப்பில் அண்மையில் வெளியிட்ட புத்தக்கத்தில் கூறப்பட்டுள்ளது பொய் என அவர் வருணித்தார்.
உண்மையில் தம்மைப் “பதவி விலகுமாறு கேட்டுக் கொள்வதற்காக அந்த மூத்த பிகேஆர் தலைவரே அன்வாருடைய பேராளராக என்னைச் சந்தித்தார் என சுல்கிப்லி சொன்னார்.
“நான் சையட் ஹுசேனின் குற்றச்சாட்டைக் கடுமையாக மறுக்கிறேன். மாறாக தாம் சொல்வது பொய் என சையட் ஹுசேனுக்கு நன்கு தெரியும். ஏனெனில் அன்வார் இப்ராஹிமின் பேராளராக அவரே என்னைச் சந்தித்துள்ளார்.”
“கூலிம் பண்டார் பாரு இடத்தைக் காலி செய்யுமாறு என்னிடம் கூறப்பட்டது. அதற்கு நான் ஒப்புக்கொண்டால் மாதம் ஒன்றுக்கு 50,000 ரிங்கிட் முதல் 60,000 ரிங்கிட் வரை ஊதியத்துடன் சிலாங்கூர் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றில் உயர் பதவியை வழங்குவதாக அன்வார் வாக்குறுதி அளித்தார்!” என்றும் சுல்கிப்லி தமது வலைப்பதிவில் ‘ஒய்வு பெற்ற நாய்கள்’ (Anjing Anjing pencen) என்னும் தலைப்பில் எழுதியுள்ளார்.