கொள்ளையர் என்று சந்தேகிக்கப்பட்ட மூவர் சுட்டுக் கொலை

பத்து    மலை,  உலு  யாம்  பாரு,  ஜாலான்  சுங்கை  துவாவில்       கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்பட்ட 3 நபர்களை   போலீசார்   சுட்டுக்கொன்றனர். அம்மூவரும்  கிள்ளான்   பள்ளத்தாக்கிலும்    நெகிரி   செம்பிலானிலும்   வங்கிகளில்   பணம்   மீட்டுச்   செல்லும்  வாடிக்கையாளர்களிடம்   கொள்ளையிடுவதை    வழக்கமாகக்   கொண்டவர்கள்   என்று    நம்பப்படுகிறது.

போலீசார்   முதன்முதலில்   பண்டார்   பாரு   செலாயாங்கில்  மாலை   மணி   6க்கு   வெண்ணிற  சுசுக்கி  ஸ்விவ்ட்   காரில்   அவர்கள்  செல்வதைக்  கண்டனர். அவர்கள்  காரில்   வேகமாக   செல்ல  முற்பட்டனர்.  ஆனாலும்  போலீஸ்   அவர்களைத்    தடுத்து    நிறுத்தியது.

சரணடையுமாறு   போலீசார்   கூறியுள்ளனர்.  அவர்கள்  மறுத்து   போலீசை  நோக்கிச்   சுட்டதாக  சிலாங்கூர்   சிஐடி    தலைவர்   எஸ்ஏசி  பாட்சில்   அஹமட்   செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.

“போலீசார்  திருப்பிச்  சுட்டதில்   மூவரும்  அந்த  இடத்திலேயே   கொல்லப்பட்டனர்”,  என்றாரவர்.

அவர்களின்  காரைச்  சோதனையிட்டதில்   ஒரு  பிஸ்டல்,  நான்கு   தோட்டாக்கள்,  இரண்டு  வெட்டுக்கத்திகள்   கண்டெடுக்கப்பட்டன.

“சந்தேகத்துக்குரிய    அவர்கள்  உள்நாட்டினரா,  வெளிநாட்டவரா  என்று   அடையாளம்   காணும்   பணி   நடந்து   வருகிறது”,  என  பாட்சில்  கூறினார்.