மியன்மாரில் கைது செய்யப்பட்ட மலேசிய செய்தியாளர் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்

 

மலேசிய ஆவணப்படம் தயாரிப்பாளர் மோக் சோய் லின் மற்றும் சிங்கப்பூர் நிழற்படம் எடுப்பவர் (கேமராமேன்) லவ் ஹோன் மெங் ஆகிய இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாங்கூனியிலிருந்து சிங்கப்பூர் வந்து சேர்ந்தனர்.என்று ஒரு சிங்கப்பூர் நாளிதழ் கூறுகிறது.

இவ்விருவரும் மியன்மார் சிறையில் இரண்டு மாதங்களைக் கழித்துள்ளனர். நேற்று காலை மணி 7.00 அளவில் விடுவிக்கப்பட்ட இருவரையும் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் யாங்கூன் விமானநிலயத்திற்கு அழைத்து வந்தனர் என்று தற்காப்பு வழக்குரைஞர் கின் மாவுங் ஸா-வை மேற்கொள்காட்டி ஸ்ரேட்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

அச்செய்தியின்படி, சிங்கப்பூர் நிரந்தரவாசியான மோக், 47, செய்தியாளர்களிடம் எதுவும் பேசாமல், சாங்கி விமானநிலையத்திலிருந்து வெளியேறினார்.

துருக்கி ரேடியோ மற்றும் டெலிவிசனால் (டிஆர்டி) வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த அந்த இரு செய்தியாளர்களுக்கும் மியன்மார் ஏரோடுரோம் சட்டம் 1934 இன் கீழ் இரண்டு மாத சிறை தண்டனை வித்திக்கப்பட்டது. நவம்பர் 10 இல் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட அவ்விருவரும் ஜனவரி 9 வரையில் சிறையிலிருக்க வேண்டும்.

ஒரு வெளிநாட்டு ஊடகச் செய்தியின்படி, அவ்விருவரும் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் எண்ணம் கொண்டிராததால் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது.

மேலும், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுடனான உறவை மியன்மார் மேம்படுத்திக்கொள்ள விரும்பியதாகவும் அச்செய்தி கூறியது.