அஸ்வான் தன் அண்ணனை ஒழித்துக்கட்ட நினைப்பது ஏன்? அவரே விளக்குகிறார்

ஒரு  காலத்தில்   தன்  அண்ணன்  சிலாங்கூர்   மந்திரி  புசார்  அஸ்மின்   அலிமீது  அளவற்ற  அன்பும்  பாசமும்   வைத்திருந்தவர்தான்  தொலைக்காட்சிப்  பிரபலம்   அஸ்வான்  அலி.

2013-இல்  அஸ்மின்  அலி  சிலாங்கூர்   மந்திரி  புசார்   ஆவதை    ஆதரித்ததுடன்   அண்ணனுக்கு   மற்றவர்களின்    ஆதரவைத்   திரட்டிக்கொடுப்பதற்கும்   மிகவும்   பாடுபட்டார்  என்றும்  கூறப்படுகிறது.

அப்படி   இருந்தவர்  இப்போது  அண்ணனைக்  ‘குழிதோண்டிப்  புதைக்க’   நினைப்பது  ஏன்?

இதற்குக்  காரணம்   பிப்ரவரி  மாதம்  காலமான    அவர்களின்   தாயார்   ச்சே  டோம்  யஹயா.    அன்னைக்கும்   அண்ணனுக்குமிடையில்  நிகழ்ந்த  கடும்   வாக்குவாதம்தான்   அவர்களின்  உறவில்   விரிசலை   ஏற்படுத்தியது. அன்னையிடம்   அண்ணன்  சொன்ன  சொல்லை  மறக்க  முடியாது,  மன்னிக்கவும்   முடியாது   என்று  குமுறுகிறார்  அஸ்வான்.

“அவர் (அஸ்மின்)   அன்னையிடம்  என்ன  சொன்னார்  என்பதைச்  சொல்வதற்கு  இப்போது   என்னால்  முடியாது . அவரை  மன்னிக்கவும்   நான்  தயாராக  இல்லை”,  என  அஸ்வான்  மலேசியாகினிக்கு   வழங்கிய   நேர்காணலில்   குறிப்பிட்டார்.

எவ்வளவு  வற்புத்திக்  கேட்டும்   அதை   அவர்  தெரிவிக்க  விரும்பவில்லை.

அண்மைய   அம்னோ  பேரவைக்  கூட்டத்துக்குத்   திடீர்  வருகை   புரிந்த   அஸ்வான்,  அஸ்மின்  பற்றிய     “இரகசியங்களை”  அம்பலப்படுத்தப்போவதாகக்   கூறினார்.

பின்னர்  அண்ணனுக்கு  எதிராக   ஊழல் குற்றச்சாட்டுகளைத்   தெரிவிக்க   எம்ஏசிசி  சென்றார்.

இதையெல்லாம்  அண்ணன்மீது  பொறாமை  கொண்டோ  அண்ணனைப்  பழிவாங்கவோ   செய்யவில்லை  என்பதையும்  அஸ்வான்  விளக்கினார்.   புனிதமானவர்  போல்   காட்டிக்கொள்ளும்  அஸ்மினின்    உண்மை முகத்தை  உலகுக்குப்   புரிய வைப்பது  தனது   கடமை   என்று  நினைப்பதாகவும்   அதனால்தான்    அப்படிச்   செய்ததாகவும்    அவர்  கூறினார்.

“பொய்யான  முகத்தைக்  காட்டிக்  கொண்டிருப்பவர்  அஸ்மின்.  ஒரு  எறும்பின்மீது   மிதித்தாலும்   எறும்பு  இறக்காதாம்.  அவ்வளவு  புனிதமானவராகக்  காண்பித்துக்  கொள்கிறார்.

“அவர்  ‘இருமுகம்   கொண்டவர்’  என்பதை    அறியாமல்   அவரைப் போற்றிப்  புகழ்கிறார்கள்……..எனக்குத்   தெரியும்  என்னிடம்   ஆதாரம்   இருக்கிறது.

“அவரைப்  பற்றிய  இரகசியங்களை   அம்பலப்படுத்துவதன்  மூலம்  மக்களுக்கு  உண்மையைப்  புரிய   வைத்து    அவரைக்  கண்மூடித்தனமாகப்  போற்றிப்  பாராட்டுவதை  நிறுத்த  முயல்வேன்”,  என்றாரவர்.

அஸ்மினின்  கொள்கைள்   தோற்றுப்போனதற்கு   எடுத்துக்காட்டுகளை  எடுத்துரைக்க   முடியுமா   என்று  கேட்டதற்கு   அண்ணன்  ஒரு  கபடதாரி,   தற்பெருமை  பேசிக்கொள்பவர்,  பெரும்  பணம்   வைத்திருக்கிறார்   என்றார்.

ஆனால்,  முன்வைக்கும்  எந்தக்  குற்றச்சாட்டுக்கும்    அவரால்   ஆதாரம்  காண்பிக்க  முடியவில்லை.

பலர்  அஸ்மினைப்  பற்றியும்   அவருக்கு   வேண்டப்பட்டவர்கள்   பற்றியும்   தன்னிடம்   புகார்   செய்திருப்பதாகக்  குறிப்பிட்டார்.  அப்படி  என்ன  புகார்  சொன்னார்கள்   என்று   கேட்டதற்கு   அதற்கும்   அஸ்வானிடம்   பதில்   இல்லை.

அஸ்மினுக்கு  எதிராக  இவ்வளவு   பேசினாலும்  அண்ணனுடன்  பகையை  மறந்து  ஒத்துப்போகும்  காலம்   வரலாம்   என்றும்  அஸ்வான்  நம்புகிறார்.

ஆனால்,  இப்போது   அது   நடக்காது,  நிலைமை   அதற்குச்   சாதகமாக  இல்லை  என்றாரவர்.

“இஸ்லாம்  மன்னிப்பு  பற்றிக்  கூறுகிறது. இறுதியில்  நானும்  அதைச்  செய்யக்கூடும்.

“ஆனால்,  அது  நடக்கலாம்,  நடக்காமலும்  போகலாம்”,  என்று  அஸ்வான்  குறிப்பிட்டார்.