இன்று காலை, ஜொகூர் பாரு, ஸ்கூடாயில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் முன் பெற்றோர்கள், வட்டாரப் பொதுமக்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்த சிலர் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.
2018, ஜனவரி 1-ம் தேதி பள்ளி திறக்கப்படும் என கடந்த ஜூன் மாதத்தில் உறுதியாகக் கூறியபோதும், நாளை தொடங்கவுள்ள பள்ளி தவணையில் இப்பள்ளி திறக்கப்படாது என அறிந்த அவர்கள் இன்று அங்கு ஒன்றுகூடி தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தினர்.
இந்த அமைதி மறியலுக்குத் தலைமை தாங்கிய, ஜனநாயகச் செயற்கட்சியின் (ஜ.செ.க.) ஆ.சந்திரசேகரன், “கடந்த ஜூன் மாதம் நாங்கள், போராட்டம் செய்தபோது, பள்ளிக் கட்டடக்குழுவினர், பள்ளி வாரியம், ம.இ.கா மற்றும் சுடர் ஒளி இயக்கத்தினர் எங்கள் மீது கண்டனம் தெரிவித்தனர். நாங்கள் உண்மை நிலவரம் அறியாமல் பேசுகிறோம், அரசியல் இலாபம் தேடுகிறோம் என்றெல்லாம் குற்றம் சுமத்தினர். பள்ளி 2018-ல் நிச்சயம் திறக்கப்படும் என உறுதியும் அளித்தனர், பத்திரிக்கையில் செய்திகள் வெளியிட்டனர், ஆனால், இன்றுவரை, பள்ளி திறப்பதற்கான எந்த அறிகுறியையும் காணவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
விரைவில் திறக்கப்படும் என்று பலமுறை வாக்குறுதி கொடுத்தும்,
இன்னும் திறக்கப்படாத பள்ளியின் நிலை கண்டு சுற்றுவட்டார மக்களும் பெற்றோரும் பொறுமை இழந்துவிட்டனர், என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“ம.இ.கா., பள்ளி வாரியம் மற்றும் ஆளுங்கட்சி சார்ந்த அமைப்புகள் ஒவ்வொரு முறையும் எங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றனர். குறிப்பாக, மாநில ம.இ.கா. தலைவர் அசோஜன், உடனே பதிலளித்துவிடுவார். அவர் என்ன கல்வி அமைச்சின் அதிகாரியா இல்லை பிரதிநிதியா? இவர்களைப் போன்றோர் அளித்த பதில்களை நம்பிதான், இன்று மக்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர்,” என்று அவர் கூறினார்.
“ஆக, இனியும் எங்களுக்கு ஆளுங்கட்சி தலைவர்களின் வெற்று வாக்குறுதிகள் வேண்டாம். கல்வி அமைச்சு நேரடியாக இறங்கி, இப்பள்ளியின் தற்போதைய நிலை குறித்து எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்,” என்றும் ஜ.செ.க. சீனாய் உத்தாமா கிளையின் தலைவருமான அவர் தெரிவித்தார்.
இன்று காலை, பள்ளிக் கட்டிடத்தை மேற்பார்வையிட மாநிலக் கல்வி இலாகாவில் இருந்து ஹஷீலி மற்றும் ஜொகூர் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு பாண்டுரங்கன் இருவரும் வந்திருந்தனர்.
தங்களால் இதுகுறித்து கருத்து எதுவும் சொல்ல முடியாது என்று இருவரும் கூறினர்.
“நாங்கள் கல்வி இலாகாவின் சார்பில், பள்ளிக் கட்டிடத்தை மேற்பார்வையிட இங்கு வந்திருக்கிறோம். மேற்கொண்டு கருத்துகூற எங்களுக்கு மேலிடத்து அனுமதி இல்லை. உங்கள் கேள்விகளுக்கு மாநிலக் கல்வி இயக்குநரே பதில் கூற முடியும், அவருக்குதான் அதிகாரம் உண்டு,” என்று திரு பாண்டுரங்கன் தெரிவித்தார்.
முழுமையடையாத நிலையில் இருக்கும் இப்பள்ளிக்கு, மாணவர் பதிவு செய்ய யார் அனுமதி கொடுத்தது என்ற கேள்விக்கு, “கல்வி இலாகா எந்தத் தரப்பினருக்கும், பதிவு மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை,” என்று ஹஷீலி தெரிவித்தார்.
மாணவர் பதிவு மேற்கொள்ள, கல்வி இலாகா எந்தவொரு
அனுமதியையும் வழங்காத நிலையில், பதிவு மேற்கொண்ட தரப்பினர் எதற்காக இதனை செய்தனர் என்று சந்திரசேகரன் கேள்வி எழுப்பினார்.
“மக்களை ஏமாற்ற ஆளுங்கட்சி இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றுகின்றதா? மக்களை முட்டாள்கள் என நினைத்துவிட்டதா? கல்வி இலாகாவின் அனுமதியின்றி செயல்பட்ட அவர்கள் மீது, நாங்கள் காவல்துறையில் புகார் செய்யவுள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இன்றையப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர் ஒருவர், “கடந்த செப்டம்பரில் எங்களைப் பதிவு செய்ய அழைத்தபோது, 2018, ஜனவரி 1-ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்றே கூறினர். இன்று, என் முன்னிலையிலேயேக் கல்வி இலாகாவின் அதிகாரி, மாணவர் பதிவுக்காக எந்தவொரு அனுமதியையும் தாங்கள் கொடுக்கவில்லை என்கிறார். ஆக, எங்களை யாரோ ஒரு தரப்பினர், அவர்களின் சுயலாபத்திற்காக ஏமாற்றிவிட்டனர். அவர்கள் மீது நான் போலிசில் புகார் செய்ய உள்ளேன்,” என்று ஆதங்கப்பட்டார்.
மாணவர் பதிவை, மாநிலத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவரின் தலைமையில், பள்ளிக் கட்டடக்குழு, பள்ளி வாரியம், சுடர் ஒளி இயக்கம் மற்றும் ம.இ.கா என அனைவரும் இணைந்தே மேற்கொண்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, செம்பருத்தி.கோம் தொடர்புகொண்டு கேட்டபோது, கட்டிடக் குழுத் தலைவர் சிவசண்முகம், ஜொகூர் கல்வி இலாகாவின் அனுமதியின் பேரிலேயே மாணவர் பதிவு நடைபெற்றதாகத் தெரிவித்தார்.
“புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளி விரைவில் திறக்கப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம். வெளியில் இருந்து ஆயிரம் கருத்துகள் சொல்லலாம், உள்ளே நடப்பவை எனக்குதான் தெரியும். கல்வி இலாகாவின் அனுமதியின் பேரிலேயே நாங்கள் மாணவர் பதிவை மேற்கொண்டோம். பதிவு மேற்கொண்டபோது ஒரு மலாய்க்கார அதிகாரி வந்திருந்தார், அவரின் பெயர் சரியாகத் தெரியவில்லை,” என்று சிவசண்முகம் கூறினார்.
மேலும், “வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. ம.இ.கா.
தொடக்கத்திலிருந்து இப்பள்ளிக்காக அனைத்து பணிகளையும் செய்துவருகிறது. நாளை, கல்வி அமைச்சின் துணையமைச்சர் பி.கமலநாதன் இப்பள்ளி குறித்த விவரங்களை வெளியிடுவார். அவரின் பதிலுக்காகக் காத்திருப்போம்,” என்று பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூர் ஜஸ்லானின் சிறப்பு அதிகாரியுமான சிவசண்முகம் தெரிவித்தார்.
தொலைபேசியில் நாம் அழைத்தபோது பதிலளிக்காத பூலாய் எம்பி, நூர் ஜஸ்லான், “பள்ளி இவ்வாண்டு (2018) அதிகாரப்பூர்வமாக திறக்குமென்று யார் சொன்னது? நான் சொல்லவில்லை, பொறுமையாக இருங்கள். முன்பு நிலம் காலியாக இருந்தது, இப்போது கட்டிடம் கட்டப்பட்டுவிட்டது, பள்ளியின் கட்டுமானப் பணிகள் முழுமையடையும் வரை காத்திருங்கள், திறக்கப்படும்,” என்று நமது குறுஞ்செய்திக்குப் பதிலளித்துள்ளார்.
கல்வித் துணையமைச்சர் பி.கமலநாதனும், தொலைபேசி அழைப்பை எடுக்காமல், குறுஞ்செய்தி வாயிலாக, தான் கூட்டத்தில் இருப்பதாகவும், பிறகு தொடர்புகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமார் 10 ஆண்டுகாலப் போராட்டத்தில் இருக்கும், இன்னும் திறக்கப்படாத அப்பள்ளியின் வாரியத் தலைவர் திரு சுரேஸ் ராவ், மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் கொடுத்த அனுமதியிலேயே மாணவர் பதிவை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
“பள்ளியில் மாணவர் பதிவு மேற்கொள்ள, திரு பாண்டுரங்கன் அனுமதி அளித்தார். மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் திரு கோ.பாலசுப்ரமணியம் தலைமையில்தான் மாணவர் பதிவு நடந்தது. மாணவர் எண்ணிக்கையை ஏறக்குறைய அறிந்துகொள்ளவே இதனை நாங்கள் மேற்கொண்டோம்,” என்று சுரேஸ் கூறினார்.
“பள்ளியில் இறுதிகட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன,
பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டன, இன்னும் பேருந்து நிறுத்தம், நடைபாதை போன்றவற்றைச் சீரமைக்க வேண்டியுள்ளது, அதற்கான மானியங்கள் கிடைத்துள்ளன, விரைவில் பள்ளி திறக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
சுரேஸ் ராவ் புக்கிட் இண்டாவில் இப்பள்ளி அமைய, ஆரம்பக்காலத்தில் இருந்து முயற்சிகள் மேற்கொண்டுவருபவர்களில் முக்கியமானவர் ஆவார்.
புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, பள்ளி விரைவில் திறக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் ஆவல். இதற்காக, இன்று போராட்டம் நடத்திய தரப்பினர், அப்பணியைத் துரிதப்படுத்த ஒரு நடவடிக்கைக் குழுவை அமைக்கவுள்ளதாக சந்திரசேகரன் தெரிவித்தார்.
இக்குழு விரைவில், மாநிலக் கல்வி இயக்குநரை சந்தித்து, பள்ளியின் நிலை குறித்து அறியும். இயக்குநரின் பதிலில் திருப்தி இல்லையென்றால், மாநிலக் கல்வி இலாகாவின் முன் அடுத்தக்கட்டப் போராட்டம் நடக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று, அப்போராட்டத்தில், பெற்றோர்கள், சுற்றுவட்டார மக்கள் மற்றும் ஜொகூர் செம்பருத்தி தோழர்களோடு, ஹிண்ராப்ட் எ.மோகன், ஜீவன் (அமானா), முருகன் (பிகேஆர்), பெ.மோகன் (பி.எஸ்.எம்.) எனப் பலரும் கலந்துகொண்டு ஆதரவு அளித்தனர்.
–ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்
வருஷ ஆரம்பமே இப்படி இருந்தால் …? ம.இ.கா. ……….. வெட்கம், மானம், ரோஷம் ….எதுவுமே இல்லை! பணத்துக்கும், பதவிக்கும் பறக்கும் வெட்கங்கட்ட …………!