ஹிஷாம்: அம்னோ “திருத்தப்படுகிறது, உருமாற்றம் பெறுகிறது”

அம்னோவுக்குள் “உட்பூசல் நிலவுவதுடன் தலைமைத்துவமும் பலவீனமாக இருப்பதாக” அதன் முன்னாள் தலைவர் டாக்டர் மகாதீர் கூறுவதை அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசேன் நிராகரித்துள்ளார்.

“அம்னோவில் மட்டும் அவ்வாறு நிகழ்வில்லை. நான் அதனை மறுக்கவில்லை. ஆனால் நாங்கள் உருமாற்றம் அடைந்து வருகிறோம். திருத்தங்களைச் செய்து வருகிறோம்”, என அவர் கூறினார்.

அந்தக் கட்சியின் இளைஞர், பெமூடா புத்ரி பிரிவுகளின் கூட்டங்களுக்கு இடையில் அவர் நேற்று நிருபர்களிடம் பேசினார்.

அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டம் நிகழ்வதற்கு முன்னர் அந்த முன்னாள் பிரதமர் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவது வழக்கம் என அவர் குறிப்பிட்டார்.

“நீங்கள் அவரை நன்கு அறிந்திருந்தால் அம்னோ பொதுக் கூட்டத்திற்கு முன்பு அத்தகைய கருத்துக்களை அவர் வெளியிடுவது உங்களுக்குத் தெரியும்.”

மலாய்க்காரர்களை அடிப்படையாகக் கொண்ட அந்தக் கட்சி தேக்கமடைவில்லை என்றும் ஹிஷாம் வலியுறுத்தினார்.

“அம்னோ பிரச்னைகளைத் தீர்ப்பதை நோக்கி சென்று கொண்டிருப்பதை அம்னோ நிகழ்வுகள் காட்டுகின்றன”, என்று அந்த செம்புரோங் எம்பி சொன்னார்.

பிரச்னைகளைத் தீர்ப்பதை நோக்கி கட்சி சென்று கொண்டிருப்பதாக ஹிஷாமுடின் கூறியதை இன்னொரு உதவித் தலைவரான ஷாபி அப்டால் ஒப்புக் கொண்டார்.

மகாதீர் உட்பட அனைவரையும் திருப்திப்படுத்துவது இயலாத காரியம் என்றார் அவர்.

“நாங்கள் கட்சி ஐக்கியத்தைப் பொறுத்த வரையில் நிறையச் செய்துள்ளோம். அனைவருடைய தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்வது எளிதல்ல”, என அதே நிகழ்வில் கலந்து கொண்ட ஷாபி கூறினார்.

மகாதீர் அம்னோவைக் கடுமையாக விமர்சனம் செய்யும் முன்னாள் பிரதமரது பேட்டியை உத்துசான் மலேசியா நேற்று தனது ஞாயிறு பதிப்பில் வெளியிட்டிருந்தது.

கடந்த 54 ஆண்டுகளாக மலேசிய அரசியலிலும் ஆளும் பிஎன் கூட்டணியிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த அம்னோவை, தாம் நியமனம் செய்த அடுத்த பிரதமரான அப்துல்லா அகமட் படாவி கட்சியை சீரழித்து விட்டதாக மகாதீர் அந்தப் பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தார்.

அப்துல்லாவின் மோசமான தலைமைத்துவத்தின் தாக்கத்திலிருந்து நடப்பு அம்னோ இன்னும் விடுபடவில்லை எனக் கூறிக் கொண்ட அவர், அதில் தலைமைத்துவம் பலவீனமாக இருப்பதோடு உட்பூசலும் நிறைந்திருப்பதாக சொன்னார்.

நடப்பு தலைவர்கள் தங்களது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றும் அந்த முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்.

TAGS: