பொதுத் தேர்தலுக்குமுன் எம்பிபிஜே-க்குத் தேர்தல்

சிலாங்கூர் மாநில அரசு, அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சிமன்ற(எம்பிபிஜே) தேர்தலை நடத்தத் திட்டமிடுகிறது. ஊராட்சி மன்றத் தேர்தல்களை உயிர்ப்பிக்கும் நோக்கில் அவ்வாறு செய்யப்படுவதாக சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினர் தெரேசா கொக் கூறினார்.

1965-இல் ரத்துசெய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தேர்தல்களை மீண்டும் கொண்டுவருவது டிஏபி-இன் 2008 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. ஆனால், மூன்றாண்டுகள் ஆன போதிலும் பக்காத்தான் ரக்யாட் தன் ஆட்சியில் உள்ள நான்கு மாநிலங்களில் எதிலுமே அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

நேற்று சிலாங்கூர் டிஏபி ஆண்டுக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவருமான கொக், அது ஒரு முன்னோடித் திட்டமாக இருக்கும் என்றும் அதில் என்ஜிஓ-க்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 30 விழுக்காட்டு இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறினார்.

2008-இல், மாநில ஆட்சியைக் கைப்பற்றிய பக்காத்தான் ரக்யாட், ஒவ்வொரு ஊராட்சிமன்றத்திலும் 30விழுக்காட்டு இடங்களை என்ஜிஓ பிரதிநிதிகளுக்காக ஒதுக்கியது.

இதற்குமாறாக, பிஎன் ஆட்சிக்கு உட்பட்ட மாநிலங்களில் ஊராட்சி மன்ற உறுப்பினர் அத்தனை பேரும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களே.

ஸ்ரீகெம்பாங்கான் சிலாங்கூர் டிஏபி ஆண்டுக்கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில், எம்பிபிஜே-க்கு ஊராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவது என்பதும் ஒன்று.

தொகுதி உடன்பாடு காணப்பட்டது

இதனிடையே, சிலாங்கூர் டிஏபி உதவித் தலைவர் டெங் சாங் கிம், மூன்று பக்காத்தான் உறுப்புக் கட்சிகளும் சிலாங்கூரில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகளை முடித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். அவை அம்மாநிலத்தில் இப்போதுள்ள நிலவரத்தை அப்படியே நிலைநிறுத்திக்கொள்ளும்.

அதாவது டிஏபி நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 15 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிகேஆர் 11 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 20 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஸ் 11 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும்.

சிலாங்கூர் சட்டமன்றத் தலைவருமான டெங்,  மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்குமாறு மந்திரி புசாருக்கு சுல்தான் உத்தரவிட முடியாது என்றார்.

மாநிலச் சட்டமன்றம் அடுத்த ஜூன் மாதத்துக்குமுன் கலைக்கப்படாது என்று மந்திரி புசார் காலிட் ஏற்கனவே அறிவித்திருப்பது பற்றி விளக்கமளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

மாநில அரசமைப்பு மாநிலத் தேர்தலை எப்போது நடத்தலாம் என்று முடிவுசெய்யும் அதிகாரத்தை மாநில நிர்வாகத் தலைவருக்கே வழங்குகிறது. அதையும் அவர் விருப்பப்படி செய்ய முடியாது. 

சுல்தானின் அனுமதியைப் பெற்றுத்தான் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க முடியும் என்றாரவர்.