முகைதின்: அம்னோ, பிரச்னைகளைத் தீர்க்க இன்னும் நிறைய செய்ய வேண்டும்

அம்னோவில் உட்பூசல் மலிந்திருப்பதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறுவதை அந்தக் கட்சியின் துணைத் தலைவர் முகைதின்  யாசின் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அந்த உட்பூசல்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், முன்னைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவியிடமிருந்து பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட போது உட்பூசல்கள் உட்பட பல பிரச்னைகள் இருந்தது நமக்கு எல்லாம் தெரியும்.”

“ஆனால் அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதை நோக்கி அம்னோ செல்லவில்லை எனக் கூறுவது சரியானது அல்ல. என்றாலும் போதுமான அளவுக்குச் செய்யப்படவில்லை என நான் கருதுகிறேன். ஆகவே இன்னும் நிறைய செய்ய வேண்டும்”, என அவர் காஜாங்கில் இன்று நிருபர்களிடம் கூறினார்.

எனினும் மகாதீர் அண்மையில் வெளியிட்ட கசப்பான எச்சரிக்கைகளை முகைதின் வரவேற்றார். மகாதீர் 2003ம் ஆண்டு அப்துல்லாவிடம் அம்னோ தலைமைத்துவத்தை ஒப்படைப்பதற்கு முன்பு கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு தலைவராக இருந்துள்ளார்.

மகாதீர் கட்சி மீது இன்னும் அக்கறை கொண்டுள்ளதையும் அது காலத்துக்கு ஏற்ப மாற்றம் கண்டு அரசாங்கத்தை வழி நடத்த வேண்டும் என விரும்புவதையும் அவரது கருத்துக்கள் காட்டுவதாகவும் முகைதின் சொன்னார்.

TAGS: