1எம்டிபி நிர்வாகத்தில் தோல்விகளும் பலவீனங்களும் இருந்தன என்பதை மறுபடியும் ஒப்புக் கொண்ட பிரதமர் நஜிப், அரசியல் நலன்களுக்காக நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்த, சில தரப்பினர் இந்தப் பிரச்சினையைப் பெரிதுபடுத்த முயற்சித்ததாக குற்றம் சாட்டினார்.
இன்று கோலாலம்பூரில், இன்வெஸ்ட்மலேசியா 2018 பேசிய நஜிப், 1எம்டிபி -க்கு வலுவாக சவால்களை இட்டதோடு; சில தரப்பினர் மலேசியப் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பதை நிரூபிக்க அதனை ஓர் ஆயுதமாக பயன்படுத்த முனைந்தனர் என்றார்.
அப்பிரச்சனையைக் களைய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி விவரித்த அவர், டாக்டர் மகாதீர் மற்றும் எதிர்க்கட்சியினரை இலக்காகக் கொண்டும் பேசினார்.
“ஆனால், நாம் முந்தைய சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டோம்,” என்று மகாதீர் ஆட்சியின் போது ஏற்பட்ட தேசிய வங்கியின் அந்நியச் செலாவணி ஊழல்கள் (ஃபோரேக்ஸ் ) பற்றி சுட்டிக்காட்டியது தெளிவாகத் தெரிந்தது.
“நான் இந்தப் பிரச்சினையைச் சாதாரணமாக விட்டுவிடவில்லை. இந்த நிறுவனத்தில் தோல்வி ஏற்பட்டது, நிர்வாகத்தில் ஏற்பட்ட பலவீனம், அதனால் அதில் அக்கறை உள்ளது.
“அதனால்தான், மலேசியப் பெருநிறுவன வரலாற்றிலேயே இல்லாதா அளவு, மிக விரிவான விசாரணைக்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன், அரசாங்க அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி நாடாளுமன்ற செயலவையினர் உட்பட பல தரப்பினர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
1எம்டிபி அதன் சொத்துக்களை மறுசீரமைத்துள்ளதை நஜிப் சுட்டிக்காட்டினார். அதன் விளைவாக, மிகக் குறைந்த அளவிற்குக் கடன்களைக் குறைக்க பல நடவ்டிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
“பண்டார் மலேசியா மற்றும் துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் ஆகிய இரண்டு அதிமதிப்பு வாய்ந்த சொத்துக்களை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியில் அந்நிறுவனம் இப்போது கவனம் செலுத்துகிறது – பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குக் கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டமாக தற்போது அது உள்ளது,” எனவும் நஜிப் தெரிவித்தார்.