கூட்டரசு அரசாங்கமும் சாபா சரவாக்கும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அது, அவை கூடுதல் சுயாட்சி பெறவும் மேம்பாடு காணவும் அவசியம் என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட்.
சாபாவும் சரவாக்கும் மற்ற மாநிலங்கள்போல் அல்லாமல் பங்காளிகளாகத்தான் 1963 ஜூலையில் மலேசியா ஒப்பந்தத்தின்வழி மலேசியாவில் இணைந்தன.
“மலேசியாவை அமைக்க முனைந்தபோது மலாயா, சாபா, சரவாக் ஆகியவற்றுக்கிடையில்தான் பேச்சுவார்த்தை நடந்தது.
“ஆனால், மலேசியா அமைக்கப்பட்டதும் சாபா, சரவாக்கிடம் நாம் பங்காளிகள்போல் அல்லாமல் கிளந்தான், பெர்லிஸ், கெடா போன்ற மாநிலங்களிடம் நடந்துகொள்வதுபோல்தான் நடந்து கொண்டோம்.
“அதனால் அவற்றுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டும், அது அவர்கள் கூடுதல் அதிகாரம் பெறவும் மேம்பாடு காணவும் வழிவகுக்கும்”, என மகாதிர் இன்றைய அவரது முகநூல் உரையில் கூறினார்.
அவ்விரு மாநிலங்களிலும் வறுமை நிலவுவது குறித்தும் மேம்பாடு குறைவாக இருப்பது குறித்தும் ஒருவர் வினவியதற்கு மகாதிர் அவ்வாறு பதிலளித்தார்.
அதிகாரம் கோலாலும்பூரில் குவிந்து கிடக்கிறது என்றும் கூட்டரசு அரசாங்கம் கிழக்கு மலேசியாவுக்குப் போதுமான கவனம் செலுத்துவதில்லை என்றும் அவர் சொன்னார்.
சம மேம்பாடு காணவும், சம சமுதாய- பொருளாதார நிலையை அடையவும் இதுவும் மாற வேண்டும். என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக சாபா, சரவாக்கில் தேசியவாத உணர்வுகள் பெருகி வருகின்றன. சில தரப்புகள் கூட்டரசிலிருந்து பிரிந்து செல்வது பற்றிக்கூட பேசுகின்றன.
அவர்களின் தேசியவாத உணர்வுகளுக்கு பிஎன், ஹரபான் இரண்டுமே தீனிபோட தவறவில்லை. அம்மாநில அரசுகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க அவை உறுதியளித்துள்ளன.
ஹரபான் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட சரவாக்மீதான அதன் தேர்தல் அறிக்கையில் சரவாக்கின் வரி வருமானத்தில் 50 விழுக்காட்டை அதனிடமே திருப்பிக்கொடுக்கவும் எண்ணெய், எரிவாயு உரிமைப்பணத்தை அதிகரிக்கவும் உறுதி அளித்தது.