உயர் நீதிமன்றம் : ஆன்லைன் அவமதிப்புக்கு எதிரான சட்டத்தில் தவறு ஏதும் இல்லை

தொலைத் தொடர்பு, பல்லூடகச் சட்டம் (சிஎம்ஏ) 1998-ன் விதிமுறை,  பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறுவதாக உள்ளதால் அதனை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் எனும் சுபாங் எம்.பி. ஆர்.சிவராசாவின் விண்ணப்பத்தை, உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

சி.எம்.ஏ.-யின் 233-வது பிரிவு, சட்டப்பூர்வமாகவும் மத்திய அரசியலமைப்பின் 10-வது பிரிவை மீறவில்லை என்றும், நீதிபதி முகமட் சோபியான் அப்துல் ரசாக் தெரிவித்தார்.

“அந்த விண்ணப்பத்தில் சாதகமாக எதுவும் இல்லை, அதனை நான் செஷன்ஸ் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அனுப்புகிறேன்,” என்றார் அவர்.

செக்‌ஷன் 233, ஐக்கிய இராச்சியத்தின் செக்‌ஷன் 127 – தீங்குவிளைவிக்கும் தகவல் சட்டம் 1988-க்கு ஒத்த சட்டமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

“கடுமையான, அநீதியான செய்தி ஒன்று பகிரப்படும் போது அது குற்றம் ஆகும்,” என்று அவர் இங்கிலாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கை மேற்கோள்காட்டி பேசினார்.

அந்த வழக்கில், நீதிபதிகள் இணையம் மூலம் பரவும் சில செய்திகளின் விளைவு பற்றி, குறிப்பாக பல இனச் சமுதாயத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி அவர் கூறினார்.

சிவராசாவைப் பிரதிநிதித்த வக்கீல் குர்டியல் சிங் நிஜார், இன்றையத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

சி.எம்.ஏ.-யின் 233-வது பிரிவு, சட்டவிதி 10-வது பிரிவை மீறுவதாக உள்ளது என்று சிவராசா புகார் செய்திருந்தார்.

சி.எம்.ஏ.-யின் 233 (1) (எ) கீழ், RM50,000 மிகாத அபராதம் அல்லது ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.