பொருள், சேவை வரி (ஜி.எஸ்.டி) ஆறு விழுக்காட்டிலேயே தொடர்ந்து இருக்கும் என, அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பிரதமர் நஜிப் மீண்டும் வலியுறுத்தினார்.
இன்று, புத்ராஜெயாவில், “ நான் வாக்குறுதி கொடுக்கிறேன், அரசாங்கம் ஜிஎஸ்டி-யை உயர்த்தாது,” என்று அவர் கூறினார்.
உலகிலேயே ஆகக் குறைந்த ஜிஎஸ்டி விதிக்கும் நாடு மலேசியா என்றும் அவர் சொன்னார்.
ஜிஎஸ்டி, அன்றாட வாழ்க்கைச் செலவினங்களை அதிகரித்துவிட்டது, குறிப்பாக குறைந்த வருமானம் பெரும் மக்கள் சிரமப்படுகின்றனர் என்று பலர் விமர்சிக்கின்றனர்.
ஆனால், நாட்டின் பொருளாதாரம் நிலைத்தன்மையோடு இருக்க, ஜிஎஸ்டி பெரும் பங்காற்றுகிறது என அவர் சொன்னார்.
“ஜிஎஸ்டி இல்லையென்றால், அரசாங்க ஊழியர்களுக்குப் போனஸ் கொடுத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை,” என்றார் அவர்.
“ஜிஎஸ்டி இல்லை என்றால், ஒருவேளை நாம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்போம்,” என்று அவர் கூறினார்.
2018 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட போனஸ், இரண்டு தவணையாக, ஜனவரி தொடக்கதில் ரிம 1000-ஆகவும், ஹரிராயா கொண்டாட்டத்திற்கு முன்னதாக ரிம500-ஆகவும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
கடந்தாண்டு, ரிம44 பில்லியன் ஜிஎஸ்டி வசீலிக்கப்பட்டதாகவும், இவ்வாண்டு அது ரிம45 பில்லியனாக உயர வாய்ப்புள்ளதாகவும் நஜிப் மேலும் தெரிவித்தார்.