அடுத்த ஆண்டுத் தொடக்கம் மலேசியர்களிடமிருந்து தவணைக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் தேசிய சுகாதாரப் பராமரிப்பு நிதி வாரியம்(என்எச்எப்ஏ), பிஎன் அரசாங்கத்துக்கு பணம் கறக்கும் இன்னொரு காமதேனுவாக மாறிவிடலாம் என்று மாற்றரசு எம்பி ஒருவர் எச்சரிக்கிறார்.
வருமானம் ஈட்டும் மலேசியர் அனைவரும், தனியார் மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு என்எச்எப்ஏ-க்குக் கண்டிப்பாக பணம் கட்டியாக வேண்டும் என்று பாரிட் புந்தார் எம்பி முஜாஹிட் யூசுப் ராவா இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார். அந்த வாரியம் 2012 முதல் பாதியில் செயல்படத் தொடங்கலாம் என்றாரவர்.
“இத்திட்டம் அடிப்படை மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமே உதவும். எனவே மருத்துவ சிகிச்சைக்காகக் கூடுதல் பணத்தைச் செலவிட்டே ஆக வேண்டியிருக்கும்.
“சரி, வருமானம் இல்லாதோரின் நிலை அல்லது வந்துகொண்டிருந்த வருமானம் நின்று போனால் அவர்களின் நிலை என்னவாகும்? அவர்கள் எங்கு மருத்துவ சிகிச்சை பெறுவார்கள்?”, என்றவர் வினவினார்.
என்எச்எப்ஏ- அரசுசார் நிறுவனமாக்கப்பட்டு பிஎன்னுக்கு வேண்டிய ஒருவரிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
“அப்படி நடக்குமானால் அதன் கதி அதோகதிதான். மற்ற அரசுசார் நிறுவனங்களில் நிகழ்வதுபோல் இங்கும் பணம் தவறாகப் பயன்படுத்தப்படலாம்.
“நிறுவனத்தின் நடைமுறைச் செலவுகளில் பெரும்பகுதி உயர் அதிகாரிகளின் சம்பளங்களுக்கும் மற்ற சலுகைகளுக்கும் சென்று விடும். பல இடங்களில் இதுதானே நடக்கிறது”, என்றாரவர்.
மில்லியன் கணக்கான மலேசியர்கள் மாதந்தோறும் பணம் கட்டுவதால் என்எச்எப்ஏ-இடம் பெரும்பணம் சேரும். அது அரசாங்கத்துக்கும் வசதியாக போகும்.
“இந்தப் புதிய அரசுசார் நிறுவனம் பணம் கறக்கும் காமதேனுவாக மாறும் சாத்தியம் இருக்கிறது”, என்றாரவர்.
“மலேசிய சுகாதாரப் பராமரிப்பு முறையில் சீரமைப்பு: அதற்குத் தேவை உண்டா?’ என்ற தலைப்பில் பொதுக் கருத்தரங்கம் ஒன்று நவம்பர் 27-இல் பிற்பகல் மணி ஒன்றிலிருந்து மாலை 6மணிவரை பினாங்கு ஜாலான் மெக்கலிஸ்டரில் உள்ள ஒய்எம்சிஏ-இல் நடைபெறுகிறது. பொதுமக்கள் அதில் கலந்துகொள்ள வேண்டுமாய் அவர் கேட்டுக்கொண்டார்.
என்எச்எப்ஏ, தேசிய 1சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தின்கீழ்(1பராமரிப்பு) வரும் நிதியைப் நிர்வகிப்பதற்கு அமைக்கப்பட்ட ஆதாய நோக்கில்லா அரசு நிறுவனம் எனச் சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய் அறிவித்துள்ளார்.
1பராமரிப்பு, விரிவான சமூகக் காப்புறுதித் திட்டத்தின்கீழ் மக்களுக்குப் பாதுகாப்பளிக்கும் என்றாரவர்