7 ஏக்கள் பெற்ற 1,191 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு MRSM முதலாம் படிவத்திற்கான வாய்ப்பு வழங்கவேண்டும்

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் நாளிதழ்களில் நூற்றுக்கணக்கான 7 ஏக்கள் பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வெற்றிக் களிப்பில் திகைத்திருக்கும் புகைப்படங்கள் தலைப்புச் செய்திகளாக வெளியீடு காண்கிறது.

இந்த ஆண்டு 1,191 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7 ஏக்கள் பெற்று சிறந்த சாதனைப் படைத்துள்ளனர் என்று மனித உரிமைக் கட்சி அமைப்புக் குழுத் தலைமைச் செயலாளர் பி.உதயகுமார், பிரதமர் மற்றும் துணைப்பிரதமர் ஆகியோருக்கு எழுதிய கடித்ததில் குறிப்பிட்டிருந்தார்.

2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் முறையே 817 மற்றும்  798 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் யூபிஎஸ்ஆர் தேர்வில் 7ஏக்கள் பெற்றிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்களின் வெற்றிக் களிப்பு 18.11.11 மலேசிய நண்பன், தமிழ்நேசன் மற்றும் மக்கள் ஓசை ஆகிய நாளிதழ்களில் முதல் பக்கம் தலைப்புச் செய்தியில் வெளிவந்துள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

தேசியப் பள்ளி மாணவர்களின் முழு தேர்ச்சி 5 ஏக்கள் மட்டுமே. அதைக்காட்டிலும் 7 ஏக்கள் பெற்ற 1,191 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதயகுமார் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். இருப்பினும் இதற்குப் பின் இவர்களின் கல்விப் பயணத்தைத் தொடர அரசாங்கம் எவ்விதத்தில் வாய்ப்பளிக்கும் என்று பி.உதயகுமார் கவலை தெரிவித்தார்.

இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் அவல நிலையில் இயங்கி வந்தாலும் இத்தகைய சிறந்த தேர்ச்சியை அடைந்துள்ளன.

1) நாடு சுதந்திரமடைந்து 54 ஆண்டுகள் ஆகி தற்பொழுது “ஒரே மலேசியா” என்று அழைக்கப்பட்டாலும் நாட்டிலுள்ள அனைத்து 523 தமிழ்ப்பள்ளிகளும் முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக மாற்ற மறுக்கப்பட்டுள்ளது.

2) நாட்டிலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் பாலர் பள்ளிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

3) எனவே 90% தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வறுமைக் காரணத்தினால் பாலர் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை.

4) தமிழ்ப்பள்ளியில் பயிலும் ஏறத்தாழ 42% முதலாமாண்டு மாணவர்கள் பாலர்பள்ளி கல்வி நிராகரிக்கப்பட்டதால் எழுதப் படிக்கத் தெரியவில்லை. (மக்கள் ஓசை 10.3.2010 பக்கம் 3).

5) உலகிலேயே இந்நாட்டுத் தமிழ்ப்பள்ளிகளின் நிலை படுமோசமாக உள்ளது. பினாங்கு, அஸாத் தமிழ்ப்பள்ளி சுரங்கத்தில் இயங்கி வரும் வேளையில், பினாங்கு பத்து காவான் மற்றும் தைப்பிங் தமிழ்ப்பள்ளி இரும்பு கொள்கலன்களிலும், லுக்கூட் தமிழ்ப்பள்ளி கடைவீட்டின் முதல் மாடியில் இயங்கி வருகிறது. மேலும் கோப்பெங், கிளேன்மேரி, நிபோங் திபால் மற்றும் போர்ட்டிக்சன், சென்டாயான் தோட்டத் தமிழ்ப்பள்ளிகள் கறையான் அரித்து இடிந்து விழும் நிலையில் இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்கி வருகின்றன.

சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 1,191ஆக இருப்பினும், எம்ஆர்எஸ்எம்மில் முதலாம் படிவம் பயில இவர்களில் 0.1% மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்று கணிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி தேசிய கல்வி திட்டத்தின் கீழ் ஒரே மலேசியா கொள்கையின் அடிப்படையில் மலாய் முஸ்லிமின மாணவர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற இந்த 1,191 இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டினார்.

ஆகவே இந்த அநீதிகளை சரிசெய்யும் வகையில் மலேசிய பிரதமரின் ஒரே மலேசியாவின் கீழ் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அனைத்து 1,191 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக இந்த முழு நேரம் தங்கும் வசதி கொண்ட எம்ஆர்எஸ்எம் பள்ளிகளில் நுழைவு அனுமதிக்கப்பட வேண்டும் என்று பி.உதயகுமார் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டார்.

கடந்த 54 ஆண்டுகாலமாக இதைப்போன்ற அனைத்து 1,191 சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நாடுதோறுமுள்ள எம்ஆர்எஸ்எம் சிறந்த மற்றும் முழு தங்கும் வசதி கொண்ட 12,440 இடங்களில் கல்வி கற்க வாய்ப்பளிக்கப்படவில்லை. (பெரித்தா ஹாரிஹான் 21/11/09 பக்கம் 7). மலாய் பள்ளி மாணவர்கள் 5 ஏக்கள் மட்டுமே பெற முடியும் என்ற வேளையில் 7 ஏக்கள் பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தகுந்த வாய்ப்பு அளிக்கப்படாவிட்டால் அவர்களால் எப்படி நாட்டின் முன்னேற்றத்தில் பங்களிக்க தங்களது அறிவாற்றலை வலுப்படுத்த முடியும்? என்று அவர் கேள்வியெழுப்பினார்.

அதுமட்டுமின்றி கடந்த 28/11/10 தேதியிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டதற்கிணங்க மலேசியாவின் இந்திய மாணவர்களுக்கான முதல் முழு தங்கும் வசதி கொண்ட சிறந்த பள்ளியாக அமைய பிரேசர் மலை தமிழ்ப்பள்ளி சிறந்த தேர்வாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். இவ்வாண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் 7 ஏக்கள் பெற்று சிறப்பு தேர்ச்சியடைந்த 1,191 இந்திய மாணவர்கள் தங்கி பயில வகை செய்யும் அளவில் பிரேசர் மலையில் உள்ள தமிழ்ப்பள்ளி விளங்கக்கூடிய வசதியைப் பெற வேண்டும். போலீசாரின் பிள்ளைகள் பயில எம்ஆர்எஸ்எம் பிடிஆர்எம், இராணுவ வீரர்களின் பிள்ளைகள் பயில எம்ஆர்எஸ்எம் ஏதிஎம், பெல்டா தொழிலாளர்களின் பிள்ளைகள் பயில எம்ஆர்எஸ்எம் பெல்டா (100% மலாய் மாணவர்கள்) பயிலும் போது இந்த தமிழ் எம்ஆர்எஸ்எம் 7ஏக்கள் பெற்ற 1,191 மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையிலும் நாட்டிலுள்ள அனைத்து 523 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி மலாய் பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களும் தொடர்ந்து சிறந்த தேர்ச்சி பெற அடித்தளமாக விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவிலேயே முதல் தங்கும் வசதி கொண்ட தமிழ்ப்பள்ளியாகவும் பிரேசர் மலை தமிழ்ப்பள்ளி விளங்க அரசாங்கம் உதவ முன்வரவேண்டும் என்று பி.உதயகுமார் அக்கடிதத்தில் கருத்துரைத்தார். இவ்வாண்டு ஆறாம் ஆண்டை சிறப்புர முடித்து விட்டு முதலாம் படிவம் செல்லும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென அனைத்து வசதிகளையும் அரசாங்கம் ஏற்பாடு செய்துத் தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஏழை இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி மலேசியாவின் தேசிய மேம்பாட்டு நீரோட்டத்தில் இந்தியர்களையும் இணைக்க இது வழிவகுத்திடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதன் மூலம் வாழ்க்கைத் துயரத்தில் மூழ்கியிருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்களின் கண்ணீர், வலி, வேதனை மற்றும் துன்பத்திலிருந்து விடுபடுவார்கள் என்று உதயகுமார் தனது அறிக்கையின் இறுதியில் குறிப்பிட்டிருந்தார்.

-HRP