பிஎன் ஆதரவு இணைய எழுத்தர்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அங்கீகரித்துள்ளது பக்காத்தான் ராக்யாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அப்பட்டமான அவதூறு தாக்குதல்களுக்கு அரசாங்கம் அனுமதி கொடுப்பதற்கு ஒப்பாகும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார்.
ஒரே மலேசியா சமூக ஊடக தொண்டர்கள் அணியை நஜிப் தொடக்கி வைத்துள்ளது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அம்னோ தலைவருடைய அரசியல் எதிரிகள் மீது பொய்யான தகவல்களை பரப்புவதற்கு அது ஊக்கமளிக்கிறது. அங்கீகாரம் வழங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
எடுத்துக்காட்டுக்கு லிம் தமது சொந்த அனுபவத்தைக் குறிப்பிட்டார். தமது 16 வயதுப் புதல்வன் சக மாணவி ஒருவரை மானபங்கப்படுத்தியதாக பிஎன் ஆதரவு வலைப்பதிவாளர்கள் தவறாகக் கூறியதைத் தொடர்ந்து அவனை இன்னொரு பள்ளிக்கூடத்துக்கு மாற்ற நேர்ந்ததை லிம் நினைவு கூர்ந்தார்.
“பாதிக்கப்பட்டவருடைய பெற்றோர்களை சாந்தப்படுத்துவதற்காக லிம் 200,000 ரிங்கிட் கொடுத்தார் என்றும் அந்த வலைப்பதிவாளர்கள் கூறிக் கொண்டனர். அந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.
“இருந்தும் அம்னோ இணைய செய்தித் தளம் உட்பட பிஎன் இணைய துருப்புக்கள் என்னையும் என் குடும்பத்தையும் களங்கப்படுத்த இடைவிடாமல் முயற்சி செய்கின்றன”, என பினாங்கு முதலமைச்சருமான லிம் சொன்னார்.
பினாங்கு அம்னோ தலைவர் டாக்டர் நோவாண்டிரி ஹசான் பேரி-யும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கரி ஜமாலுதினும் ஒரே மலேசியா சமூக ஊடக தொண்டர்கள் அணி தொடக்க விழாவில் கலந்து கொண்டுள்ளது லிம்-முக்கு மேலும் வெறுப்பைத் தந்துள்ளது.
தீய தந்திரங்களுடன் இணையத் துருப்புக்கள்
அவர்கள் அந்த விவகாரம் உச்சக் கட்டத்தில் இருந்த போது லிம்-மின் புதல்வனைப் பற்றிக் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
“பிஎன் ஆதரவு இணையத் துருப்புக்கள் பிஎன் -னின் இணைய இராணுவத்தின் ஒர் அங்கம் என அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கியதின் மூலம் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பொய்களைப் பரப்புவதோடு ஏமாற்று வேலைகளிலும் பிஎன் ஈடுபடும் என்பதை நஜிப் ஒப்புக் கொள்கிறாரா?
“பிஎன் ‘இணைய இராணுவத்திடமிருந்து அவதூறான தாக்குதல்களைத்தான் நாம் எதிர்பார்க்க வேண்டுமா? தீய தந்திரங்களை பயன்படுத்தும் நஜிப்பின் புதிய இணையத் துருப்புக்களினால் வரும் 13வது பொதுத் தேர்தல் இதுவரை நிகழ்ந்திராத அளவுக்குக் கறை படிந்ததாக இருக்கும் என்பதற்கு ஆதாராமா?” என லிம் வினவினார்.
நேற்று ஒரே மலேசியா சமூக ஊடக தொண்டர்கள் அணியைத் தொடக்கி வைத்துப் பேசிய நஜிப், பிஎன் ஆதரவு சமூக ஊடகவியலாளர்கள் அந்த கூட்டணியின் புதிய இராணுவம் என வருணித்ததுடன் “அதிகாரத்துவ அங்கீகாரத்தையும்” வழங்கினார்.
“இணையப் போராளிகள் என்னும் முறையில் உங்கள் பணி இதுதான். நமது சமூக ஊடக இராணுவம் களத்தில் இறங்கலாம். உங்கள் சட்டைக் கைகளை மடித்துக் கொள்ள வேண்டாம் டிரவுசர்களையும் மடித்துக் கொள்ள வேண்டாம்.”
“உங்கள் ஐ பாட், ஐ போன், பிளாக்பெரிஸ், மடிக்கணினி ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள். இணையப் போராளிகள் என்னும் முறையில் அவையே நமது ஆயுதங்கள்,” என நஜிப் அங்கிருந்த ஈராயிரம் பேரிடம் கூறினார்.