அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்ட அனுமதிகள் மலேசியாகினிக்குக் கிடைத்தன, ஆனால்..

வரலாற்றில் முதன் முறையாக அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தைப் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதற்கு மலேசியாகினிக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஒரு பிடியும் உள்ளது.

17 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்ட போதிலும் இரண்டு பேருக்கு மட்டுமே அதாவது நிருபர் ஒருவருக்கும் வீடியோ ஒளிப்பதிவாளர் ஒருவருக்கும் மட்டுமே அங்கீகாரக் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதற்கு நேர்மாறாக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவுக்கு 103 கார்டுகளும் சீனாவின் சின் ஹுவா செய்தி நிறுவனம் போன்ற அந்நியச் செய்தி நிறுவனங்களுக்கு மூன்று கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இன்னொரு செய்தி இணையத் தளத்துக்கு இரண்டு கார்டுகள் மட்டுமே கிடைத்திருப்பதாகத் தெரிய வருகிறது. அதே வேளையில் பிரபலமில்லாத லாக்சாவ் என்ற மண்டரின் மொழி செய்தி இணையத் தளத்துக்கு நான்கு கார்டுகள் கிடைத்துள்ளன.

மலேசியாகினியின் மனித ஆற்றலை இரண்டாகக் கட்டுப்படுத்துவதால் ஐந்து நாட்களுக்கு நடைபெறவிருக்கும் அம்னோ நிகழ்வுகளைப் பற்றி அது சரியான முறையில் செய்தி சேகரிக்க முடியாமல் போகலாம்.

மாநாட்டு நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு காணொளி அறையில் இவ்வாண்டு “புறம்போக்குவாசிகள்” இருப்பதைத் தடுக்க தான் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக அம்னோ செயலகம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டுப் பொதுக் கூட்டத்தை பற்றிய செய்திகளை ஒவ்வொரு ஊடகமும் வெளியிட்ட அளவைப் பொறுத்து இவ்வாண்டு அங்கீகாரக் கார்டுகளின் எண்ணிக்கையைக் கட்சிச் செயலகம் கட்டுப்படுத்தப் போவதாகவும் ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

இவ்வாண்டு மிக அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதே அதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டங்கள் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதற்கு ஊடக அங்கீகார கார்டுகளைப் பெறுவதில் மலேசியாகினி தோல்வி கண்டது. அதன் நிருபர்கள் காணொளி அறையில் இருந்து கொண்டு செய்திகளை சேகரித்தனர்.

பல ஆண்டுகளுக்கு அது தொடர்ந்தது. ஆனால் கடந்த ஆண்டு அங்கீகாரம் பெறாத ஊடக நிறுவனங்கள் அந்த அறையிலிருந்து வெளியேற்றப்பட்டன. பல முறையீடுகளுக்கு பின்னர் கையளவு (சில) அங்கீகாரக் கார்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டன.

TAGS: