இவ்வாண்டு சீனப் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுவது, நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு கண்டிருப்பதைக் காட்டுகிறது என்று பிரதமர் நஜிப் இரசாக் கூறியுள்ளார்.
இந்தப் புத்தாண்டு கொண்டாட்ட மகிழ்ச்சியை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரிசானுக்கு வாக்களிப்பதில் பிரதிபலிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்தாண்டு, நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்று வந்ததையும் உள்நாட்டு உற்பத்தி உயர்ந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“நமது பொருளாதாரம் 5.9% உயர்ந்துள்ளது, பங்குகளும் உயர்ந்துள்ளன, ரிங்கிட்டின் மதிப்பும் நிலைபெற்றுள்ளது, அதனால் மக்கள் நாட்டின் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.
“இந்தப் புத்தாண்டு, அரசாங்கத்திற்கு நல்லதொரு, ஊக்கமான தருணத்தைக் கொடுக்கும் என நாம் எதிர்பார்ப்போம்,” என்று இன்று, அம்பாங், விஸ்மா ம.சீ.ச.-வில் நடந்த தேசிய அளவிலான சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இன்றைய சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில், பிரதமரோடு அவரின் துணைவியார் ரொஸ்மா மன்சூர், துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடி, ம.இ.கா. தேசியத் தலைவர் சுப்ரமணியம், மைபிபிபி தேசியத் தலைவர் கேவியஸ் மற்றும் பல அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.