ஓன்லைன் செய்தித்தளங்களில் வெளியான கட்டுரைகளை அகற்ற எம்சிஎம்சி உத்தரவு

 

மலேசிய தொடர்புகள் மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) இரண்டு ஓன்லைன் செய்தித்தளங்கள் வெளியிட்டுள்ள பல கட்டுரைகளை அகற்றும்படி அவற்றுக்கு உத்தரவிட்டுள்ளது. அக்கட்டுரைகள் சட்டத்திற்கு முரணானதாக இருப்பதாக அது கூறிற்று.

த ஸ்டார் செய்தியின்படி, ஒரு செய்தித்தளம் அதன் ஏழு கட்டுரைகளை அகற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அச்செய்தித்தளம் த மலேசியன் இன்சைட் என்று மலேசியாகினி தெரிந்து கொண்டுள்ளது. அதன் கருத்துக்காக மலேசியாகினி காத்துக் கொண்டிருக்கிறது.

ராஜா பெட்ரா கமாருடினின் மலேசியா டுடே அதன் கட்டுரைகளில் ஒன்றை அகற்றும்படி எம்சிஎம்சி நேற்று உத்தரவிட்டது.

கிடைத்த புகார்களின் அடிப்படையில் எம்சிஎம்சி மேற்கொண்ட விசாரணையில் அக்கட்டுரைகள் எம்சிஎம்சி சட்டம் 1998 இன் செக்சன் 233 க்கு முரணாக இருப்பதாக எம்சிஎம்சியின் கடிதம் கூறுகிறது.

பெப்ரவரி 11 இல் வெளியிடப்பட்ட “முதல் பெண்மனி எஜிசி கிரேஸ் முகாபியின் வழியில் செல்கிறார் (“First Lady AGC Walking The Path of Grace Mugabe”) என்ற தலைப்பிலான கட்டுரையை அகற்றும்படி மலேசியா டுடேய்க்கு உத்தரவிடப்பட்டது.

இக்கட்டுரை சட்டத்துறை தலைவர் (AG) முகமட் அபாண்டி அலியின் துணைவியார் பாரிடா பேகம் பற்றியதாக நம்பப்படுகிறது. அவர் மலேசியா டுடேய்க்கு எதிராக போலீஸ் புகார் செய்துள்ளார்.

சம்பந்தப்பட்ட செய்தித்தளங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் பற்றி மக்களிடமிருந்து பல புகார்கள் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அகற்றும்படி உத்தரவிடப்பட்ட எட்டு கட்டுரைகளும் தற்போதையப் பிரச்சனைகள் மற்றும் உள்ளூர் அரசியல் பற்றி குறிப்பிடுவதோடு அவை பகிரங்கமாக சில அரசியல் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் குறைகூறியுள்ளன என்று த ஸ்டார் கூறுகிறது.