ஐஜிபி: நமெவீயின் ‘ஒரு நாய் போல’ வீடியோயைப் போலிஸ் விசாரிக்கிறது

‘லைக் எ டாக்’ (ஒரு நாய் போல) என்ற பெயரில், ரேப் பாடகர் வீ மெங் சீ அல்லது நாமெவீ வெளியிட்ட ஒரு சீனப் புத்தாண்டு பின்னணியிலான வீடியோ கிளிப்பைப் போலிஸ் விசாரணை செய்கின்றது.

போலிஸ் தலைவர் ஃபூஷி ஹாருன், நமெவீ மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், போலிஸ் தரப்பு தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் கூறியுள்ளதாக தி ஸ்தார் செய்திகள் கூறுகின்றது.

“குற்றவியல் கோட் 298 பிரிவு (பிற மக்களின் மத உணர்வுகளைத் தூண்டிவிடும் நோக்கத்தோடு அறிக்கைகளை வெளியிடுவது) மற்றும் ஆன்லைன் வசதிகளைத் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பான தகவல்தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 கீழ் இவ்வழக்கு விசாரணை செய்யப்படுகிறது,” என்று ஃபூஷி தெரிவித்தார்.

முன்னதாக, சர்ச்சைக்குரிய பொழுதுபோக்குக் கலைஞர் நமெவீ, தனது வீடியோ கிளிப், எந்தவொரு மதத்தையும் அவமதிப்பதற்காக அல்ல என்று தற்காத்து பேசியிருந்தார்.

அந்த வீடியோ படப்பிடிப்பு, பள்ளிவாசலுக்கு முன்புறமாக எடுக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் அவர் கூறினார்.

“நீங்கள் அந்த இசை வீடியோவில், அநாகரீகமான நடத்தை உள்ளதாக உணரலாம், ஆனால் அது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே…… எந்த மதத்தையும் இனத்தையும் அவமதிக்கும் எண்ணம் இல்லை.

“அதன் படப்பிடிப்பு, புத்ராஜெயா பிரதான சாலையின் விளிம்பில் உள்ள திறந்த வெளியில் எடுக்கப்பட்டது, அது பள்ளிவாசல் அல்ல,” என்று அவர் கூறியிருந்தார்.