போலிச் செய்திகள் பரப்புவதைத் தடுக்க வேண்டுமா, இப்போது தொடர்புப் பல்லூடகச் சட்டத்தில்(சிஎம்ஏ) வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்கிறார் மலேசிய தொடர்புப் பல்லூடக ஆணைய(எம்சிஎம்சி) தலைமை நடவடிக்கை அதிகாரி மஸ்லான் இஸ்மாயில்.
அக்குற்றச் செயல் புரிய நினைப்பவரைத் தடுப்பதற்கு சிஎம்ஏ பிரிவு 233(1)இன்கீழ் இப்போது வழங்கப்படும் தண்டனை போதுமானதல்ல என்றவர் கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.
“என் கருத்து, ரிம50,000-ஆக உள்ள அபராதத் தொகையை ரிம500,000 ஆகவும் சிறைத்தண்டனையை (ஒரு ஆண்டிலிருந்து) பத்தாண்டுகளாகவும் உயர்த்த வேண்டும்.
“இது நல்ல பாடமாக அமையும். அதன்பின்னர் யாரும் போலிச் செய்திகளைப் பரப்பத் துணிய மாட்டார்கள்”, என மஸ்லான் அந்நாளேட்டிடம் கூறினார்.
அதேவேளை “போலிச் செய்திகள்”மீது புத்ரா ஜெயா எடுக்கும் நடவடிக்கை பேச்சுரிமையையும் கருத்துச் சுதந்திரத்தையும் பத்திரிகைச் சுதந்திரத்தையும் மீறும் செயல் என்று கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.