முஸ்லீம் அல்லது மலாய் வாக்குகளைப் பிரிப்பதாக, அமானாவைக் குற்றம் சாட்டிய பாஸ் தலைவர் அப்துல் ஹடி ஆவாங்கின் அறிக்கை குறித்து, தேசிய அமானா கட்சி கேள்வி எழுப்பியது.
பிகேஆர் மற்றும் பெர்சத்து கட்சிகளும் அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றை எதிர்க்கும் வேளையில், ஏன் அமானா மட்டும் மலாய்க்காரர்களைப் பிளவுபடுத்துகிறது என அமானா தலைவர் முகமட் சாபு கேள்வி எழுப்பினார்.
“அம்னோ மற்றும் பாஸ்-ஐ எதிர்த்து அமானா போட்டியிட எண்ணினால், மலாய்க்காரர்களைப் பிளவு படுத்துவதாகக் கூறப்படுகிறது?
“பிகேஆர் மற்றும் பெர்சத்து இரண்டும்கூட அம்னோ மற்றும் பாஸ்-ஐ எதிர்த்து போட்டியிட உள்ளன, ஆக, அக்கட்சிகளும் மலாய்க்காரர்களைப் பிளவு படுத்துவதாகக் கருதப்படுமா?
“பிகேஆர் வசமிருக்கும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக பாஸ் அறிவித்தது, மலாய்க்காரர்களைப் பிளவுபடுத்தாதா?” என்று இன்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.
முன்னதாக, ஜிஇ14-ல், முஸ்லிம் மற்றும் மலாய்க்காரர்கள் வாக்குகளைப் பிரித்து, அம்னோவை வெற்றிபெற வைக்கவே அமானா உருவாக்கப்பட்டது என பாஸ் தலைவர் ஹாடி அவாங் கூறியிருந்தார்.
“அம்னோவை எதிர்க்க வேண்டும் என்றால், அமானா ஏன் பாஸ் கட்சியின் பாரம்பரிய நாற்காளிகளுக்குத் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்,” என ஹாடி கேள்வி எழுப்பி இருந்தார்.
அமானா போட்டியிடவிருக்கும் 27 நாடாளுமன்ற சீட்டுகளில், பெரும்பாலானது பாஸ் போட்டியிடும் இடங்கள் என்று ஹாடி தெரிவித்தார்.
ஜிஇ14-ல், பாஸ் 130 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது.