பெர்சத்துக் கட்சி சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) அதனிடம் கேட்டிருந்த ஆவணங்களை வியாழக்கிழமை அதற்கு விதிக்கப்பட்ட 30-நாள் கெடு முடிவடைவதற்குமுன் ஒப்படைத்தது.
ஆர்ஓஎஸ் பிப்ரவரி 28-இல் பெர்சத்துவுக்கு ஒரு கடிதம் அனுப்பி 30 நாள்களுக்குள் அதன் கூட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள், நிதி சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தவறினால் அதன் பதிவு ரத்தாகும் என்றும் எச்சரித்திருந்தது.
ஆர்ஓஎஸ்ஸுக்குத் தேவையான ஆவணங்களை பெர்சத்து அமைப்புச் செயலாளர் கேப்டன் (ஓய்வு) முகம்மட் சுஹாய்மி யாஹ்யா வியாழக்கிழமை பிற்பகல் நேரில் சென்று ஒப்படைத்தார்.
“எனவே, ஆர்ஓஎஸ் கேட்டுக்கொண்டபடி செய்து விட்டோம்”, என்றாரவர்.
ஆர்ஓஎஸ் கேட்டுக்கொண்டபடி பெர்சத்து நடந்து கொண்டிருப்பதால் இனி அக்கட்சி 14வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில் சட்டச் சிக்கல் இருக்காது என்று நம்பலாம் என பெர்சத்து பதிவு விவகாரம் பற்றி நன்கு அறிந்த ஒரு வழக்குரைஞர் தெரிவித்தார்.
இதனிடையே, பெர்சத்து தலைமைச் செயலாளர் ஷஹாருடின் முகம்மட் சாலே ஆர்ஓஎஸ் நிபந்தனைகளின்படி பெர்சத்து நடந்து கொண்டிருப்பதால் பக்கத்தான் ஹரப்பான் பதிவு செய்யப்படுவதற்கு இனி தடை ஏதும் இருக்காது என்றார்.