பொய்ச் செய்தி தடைச் சட்டம் 2018 அரசாங்கப் பதிவு ஏட்டில் (கெஜெட்டில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. அது உடனடியாக அமல்படுத்தப்படலாம்.
சர்சைக்குரிய அச்சட்டம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பெடரல் கெஜெட் வளைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை மலேசியாகினி மேற்கொண்ட ஆயவில் தெரிய வந்துள்ளது.
ஏப்ரல் 9 இல் அச்சட்டத்திற்கு பேரரசர் ஒப்புதல் அளித்துள்ளார். அச்சட்டம் அமலுக்கு வரும் நாள் ஏப்ரல் 11.
நாடாளுமன்ற மக்களவை பொய்ச் செய்தி தடை மசோதாவை ஏப்ரல் 2 இல் ஏற்றுக்கொண்டது.
இச்சட்டம் பத்திரிக்கை மற்றும் பேச்சு சுதந்திரத்தை நசுக்குவதற்கான ஒரு நடவடிக்கை என்று மலேசியாவிலும் வெளிநாட்டிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
பொய்ச் செய்திகளைப் பரப்புகிறவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறிப்பாக தனிப்பட்டவர்களையும் அமைப்புகளையும் குறிவைத்து இம்மாதிரியான சட்டத்தை உலகில் இயற்றிய முதல் நாடு மலேசியாவாகும்.
கடந்த ஆண்டு, ஜெர்மனியிலும் இம்மாதிரியான சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டம் வெறுப்பை உண்டாக்கும் பேச்சு மற்றும் பொய்ச் செய்தி ஆகியவற்றை சமூக ஊடக தளங்களிலிருந்து நீக்கக் கோரும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு அளித்துள்ளது.

























