ஜிஇ14: பினாங்கு முதல்வர் அம்னோவில் இருந்து இல்லை, நஜிப் உறுதி

14-வது பொதுத் தேர்தலில், பினாங்கில் ஆட்சி அமைத்தால், அம்னோவைத் தவிர்த்து, பாரிசானின் மற்ற உறுப்புக்கட்சியைச் சேர்ந்தவர்தான் முதல்வராக நியமிக்கப்படுவார் என நஜிப் ரசாக் உறுதியளித்துள்ளார்.

பிஎன் இன்னும் அதிகார பகிர்வு கொள்கையை மதிக்கிறது, கடந்தகால நடைமுறைகள் தொடரும் என்று பாரிசானின் தலைவருமான நஜிப் கூறினார்.

பினாங்கில் இரண்டு தவணைகள் எதிர்க்கட்சி ஆட்சியில் சிரமங்களை அனுபவித்த மக்கள், இம்முறை பாரிசானுக்கு ஆதரவாக மாற்றங்களை ஏற்படுத்துவர் என்றும் நஜிப் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று, பினாங்கு தெலுக் கும்பார் இடைநிலைப் பள்ளியில், மக்களுடனான ஓர் இரவு விருந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

“10 ஆண்டுகளுக்குப் பிறகு, பினாங்கில் எதிர்க்கட்சியினரின் செயல்திறனை வாக்காளர்களால் மதிப்பீடு செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்……. அவர்களின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டனவா அல்லது மக்களுடைய பிரச்சினைகள் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறதா,” என்று அவர் கூறினார்.

டிஏபி ஆட்சியின் கீழ் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பினாங்கில் வெள்ளப் பிரச்சனை மிகவும் மோசமாகி வந்துள்ளது, 2013-ஆம் ஆண்டு முதல் இதுவரை 120 முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளது என நஜிப் தெளிவுபடுத்தினார்.

மக்கள் வீடுகள் வாங்குவதும் சிரமமாகிப் போனது, வாங்கும் வசதிக்குட்பட்ட வீடுகளைவிட அதிகமான சொகுசு வீடுகளே கட்டப்படுவதாகவும் நஜிப் கூறினார்.

“நாங்கள் ஆட்சியைப் பிடித்தால், ஐந்து ஆண்டுகளில் 65,000 வாங்கும் வசதிக்குட்பட்ட வீடுகளைக் கட்டுவோம்,” என்றும் அவர் கூறினார்.

-பெர்னாமா