பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக் கட்சிகளிடையே சர்ச்சையாக இருந்த, சிலாங்கூரின் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஹராப்பானின் சிலாங்கூர் மாநிலத் தேர்தல் இயக்குநரான அவர், பிகேஆர் சில ‘சலுகைகளை’ கொடுத்துள்ளது, அதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது அவர்கள் மூவரின் விருப்பம் என்றார்.
இருப்பினும், அந்தச் ‘சலுகைகள்’ என்னவென்று கூற அவர் மறுத்துவிட்டார்.
“பிகேஆரைப் பொறுத்தவரை, அந்த 6 சட்டமன்றப் பிரச்சனை முடிந்துவிட்டது,” என்று அவர் இன்று தெரிவித்தார்.
பாஸ் கட்சியின் வசமிருக்கும் ஶ்ரீ செர்டாங், லெம்பா ஜெயா, டூசுன் துவா மற்றும் பாரிசான் வைத்திருக்கும் சுங்கை பாஞ்சாங், சுங்கை புரோங் மற்றும் கோத்தா டாமான்சாரா ஆகிய 6 சட்டமன்ற நாற்காலிகள் பகிர்வு, ஹராப்பானின் 4 உறுப்புக் கட்சிகளுக்கிடையே சர்ச்சையாக இருந்தது.
முன்னதாக, சிலாங்கூரின் 56 சட்டமன்றங்களில் குறைந்தது 19 இடங்களில் பிகேஆர் போட்டியிடும் என சிலாங்கூர் அமானா தலைவர் இஷாம் ஹசிம் கூறியிருந்தார்.
டிஏபி, ஜிஇ13-ல் வெற்றிகொண்ட தனது 15 தொகுதிகளிலும் மீண்டும் இம்முறை போட்டியிடும் வேளையில், அமானாவிற்கு 9 நாற்காலிகளும் பெர்சத்துவுக்கு 7 நாற்காலிகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.