இளையத் தலைமுறையின் புதியக் குரலாக இருப்பேன், பி.எஸ்.எம். சுங்கை பூலோ வேட்பாளர் கூறுகிறார்

மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் இன்று மாலை, சுபாங் பி.எஸ்.எம். அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டார்.

சுபாங்கில் பிறந்து, வளர்ந்து, தற்போது அங்கேயே பல மக்கள் சேவைகளில் ஈடுபட்டு வரும் ஜைநூரிஜாமான் மொஹராம், 38, சுங்கை பூலோ நாற்காலிக்கு, அக்கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என, பி.எஸ்.எம். தேசியத் தலைவர் டாக்டர் நசீர் ஹஷிம் அறிவித்தார்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதி, தேர்தல் எல்லை மறுசீரமைப்புக்குப் பின்னர் சுங்கை பூலோ என மாற்றப்பட்டது.

ஜைநூரிஜாமான் கட்சியின் உறுப்பினர் அல்ல, ஆனால், பி.எஸ்.எம். சின்னத்தில் போட்டியிட அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மண்ணின் மைந்தன் எனும் வகையில், அவ்வட்டாரப் பிரச்சனைகள் தனக்கு நன்கு தெரியும் என்றும் மக்களைச் சுலபமாக அணுக முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

“நான் கம்போங் மெலாயு சுபாங்கில் வசிக்கிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களும் இங்குள்ள பள்ளியில்தான் படிக்கிறார்கள்.

“எனக்கு சுபாங்கில் அலுவலகம் இருக்கிறது, இங்கு எனக்கு நிறைய பேரை தெரியும்,” என்றார் அவர்.

“எனக்கு இங்கு நீண்ட நெடியதொரு வரலாறு உண்டு……. இதற்கு முன்னர் கல்லீரல் புற்றுநோய்க்கு ஆளாகியிருந்த நான், அந்நோயிலிருந்து குணமானதும், தன்னார்வள நடவடிக்கைகள் பலவற்றில் என்னை இணைத்துக் கொண்டேன்.

“அதனால், என்னையும் சுபாங் மக்களையும் பிரிக்க முடியாது,” என்றார் அவர்.

புதிய தலைமுறையின் பிரதிநிதி

வட மலேசியா பல்கலைக்கழகத்தில், வணிகத் துறையில் பட்டப்படிப்பு முடித்த ஜைநூரிஜாமான், சுபாங்கில் ஓர் உடற்பயிற்சிக் கூடம் வைத்துள்ளார். அதன் மூலம் ஆரோக்கியம் தொடர்பான பல நிகழ்ச்சிகளையும் உடல் பராமரிப்பு நடவடிக்கைகளையும் சுபாங் வட்டாரத்தில் மேற்கொண்டு வருகிறார்.

தான் வெற்றிபெற்றால், அத்தொகுதி மக்களுக்கு, தன் உடற்பயிற்சி கூடத்தில் இலவசமாக உறுப்பியம் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரவுள்ளதாகக் கூறினார்.

“நான் இங்குப் புதிய தலைமுறையின் பிரதிநிதியாக, புதியக் குரலாக இருப்பேன், குறிப்பாக சுபாங் தொகுதி இளைஞர்களுக்கு,” என்றார் அவர்.

பிகேஆரைச் சேர்ந்த ஆர்.சிவராசாவை எதிர்கொள்ளும் சாத்தியம் இருக்கும் என்ற போதிலும், தனக்கு பயமில்லை, மக்கள் எதிர்பார்க்கும் தகுதி தன்னிடம் உள்ளது என்றார் அவர்.

“மக்கள் எதிர்பார்ப்பது, தங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் ஒருவரை, தங்களுக்காக பணியாற்றும், சுலபமாக நெருங்கக்கூடிய ஒரு பிரதிநிதியை.

“அந்த வகையில் நான் தகுதியுடையவன் என நம்புகிறேன்,” என்று இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார்.