நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக, பி.எஸ்.எம். , பிகேஆர் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இறுதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பி.எஸ்.எம்.-இன் தலைமைச் செயலாளர், சிவராஜன் ஆறுமுகம், எதிர்வரும் ஏப்ரல் 19-ம் தேதி, கட்சி உறுதிசெய்த இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்; அதோடு பக்காத்தான் ஹராப்பானுடனான பேச்சுவார்த்தைகளும் ஒரு நிறைவுக்கு வரும் என்றார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், ஹராப்பான் தலைமைச் செயலாளர் சைய்புதின் அப்துல்லா மற்றும் பிகேஆரின் ஆர்.சிவராசா ஆகிய இருவருடனும் பேச்சுவார்த்தை நடந்ததாக சிவராஜன் தெரிவித்தார்.
கூட்டத்தில், சைய்புதின் மற்றும் சிவராசாவிடம், தங்களுக்கு ‘நல்லதொரு வாய்ப்பு’ வேண்டும்; இல்லையேல் இந்தப் பேச்சுவார்த்தையில் பயனில்லை என்று பி.எஸ்.எம். கூறியதாக சிவராஜன் தெரிவித்தார்.
“சுங்கை சிப்புட் தொகுதி மட்டும்தான் எங்களுக்கு வழங்கப்படும் என்றால், அதனை ஏற்றுக்கொள்வதில் கட்சிக்குப் பலனேதும் இல்லை,” என்றார் அவர்.
இதற்கிடையே, பக்காத்தான் ஹராப்பானுடன் பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு முடிந்துவிட்டது என, பி.எஸ்.எம். மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் தெரிவித்தார்.
“அவர்கள் கடந்த சனிக்கிழமையன்று எங்களுக்குப் பதிலளித்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எனவே, ஏப்ரல் 19-ம் தேதி எங்கள் வேட்பாளர்களை நாங்கள் அறிவிப்போம்.
“ஹராப்பானுடன் வெற்றிகரமான ஒப்பந்தம் எதுவும் ஏற்படாது எனத் தோன்றுகிறது. 18 மாதங்களாக, நாங்கள் எங்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறோம், ஆனால் அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை.”
“பிகேஆர்-உடனான கடைசி கூட்டத்தில், சுங்கை சிப்புட் மட்டுமே எங்களுக்குக் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்கள். ஒரு நாற்காலிக்காகப் பேசுவதில் பலனில்லை என்று நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டோம். ஒருவேளை வேறு சில இடங்களைக் கொடுக்க அவர்கள் சம்மதித்தால், நாம் பேச்சுவார்த்தையைத் தொடரலாம்,” என்று அருள்செல்வன் கூறினார்.
“பேராக்கில் குறைந்தது ஒரு சட்டமன்றம், சிலாங்கூரில் இரண்டு, கிளாந்தானில் ஒன்று மற்றும் கேமரன் மலை, சுங்கை சிப்புட் நாடாளுமன்றங்களை எங்களுக்குக் கொடுக்குமாறு நாங்கள் கேட்டுக்கொண்டோம்.
“அவர்கள் கலந்துபேசிவிட்டு, எங்களிடம் தெரிவிப்பதாகக் கூறினர், ஆனால் இதுவரை எந்தப் பதிலும் இல்லை.”
சுங்கை சிப்புட் மற்றும் கேமரன் மலை நாடாளுமன்றங்கள் கொடுக்கப்பட்டால், கட்சி எதிர்த்தரப்பு உடன்படிக்கையை ஆதரிப்பதோடு, ஹராப்பான் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கும் உதவும் எனப் பி.எஸ்.எம். உறுதியளித்ததாக அருட்செல்வன் கூறினார்.
“எதிர்க்கட்சி இந்த இரண்டு இடங்களை வெல்வது பிரச்சினையாக இருக்கலாம், எனவே எங்களைப் போட்டியிட அனுமதித்தால், நாங்கள் அவர்களுக்கு உதவ முடியும். அங்கு நிற்க வேண்டாமென அவர்களை நாங்கள் கேட்டுக்கொண்டோம், அப்படி நின்றால், அது பாரிசானுக்குச் சாதகமாக அமையும்.”
“சபா, சரவாக்கில் அவர்கள் சொந்தச் சின்னத்தில் நிற்க ஹராப்பான் அனுமதி அளித்துள்ளது. அதைப் போல, எங்களையும் அனுமதிக்கலாம். சுங்கை சிப்புட்டை நீங்கள் உண்மையில் கைப்பற்ற வேண்டும் என நினைத்தால், எங்களிடம் மிகச் சிறந்த வேட்பாளர் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும், புதிய அரசாங்கத்தை ஹராப்பான் அமைக்க அவர் முழு ஆதரவு கொடுப்பார்,” என்றும் அருட்செல்வன் தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் தனது வேட்பாளர் பட்டியலை, ஏப்ரல் 25-ம் தேதி அறிவிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த பிப்ரவரி 10-ம் தேதி, பத்து காஜா, உலு லங்காட், கேமரன் மலை, சுபாங் மற்றும் சுங்கை சிப்புட் ஆகிய ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 12 சட்டமன்றங்களிலும் பி.எஸ்.எம். போட்டியிடும் என்று பி.எஸ்.எம் அறிவித்தது.
ஹராப்பான் மற்றும் பி.எஸ்.எம்.-உடன் மும்முனைப் போட்டி ஏற்பட்டால், கேமரன் மலை மற்றும் சுங்கை சிப்புட் ஆகிய இடங்களில் பிஎன் வெல்வது உறுதி என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-ஃபிரி மலேசியா டூடே