சிலாங்கூர் பராமரிப்பு மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி பக்கத்தான் ஹரப்பான் சிலாங்கூரில் “குறைந்தது” 40 இடங்களையும் நாடு முழுக்க 112 இடங்களையும் கைப்பற்றும் என்று ஆருடம் கூறியுள்ளார்.
“சிலாங்கூரில் மும்முனைப் போராட்டங்கள் இருந்தாலும் குறைந்தது 40 இடங்களை வெற்றிகொள்ளும் நம்பிக்கை எனக்குண்டு.
“பலமுனைப் போட்டி பற்றிக் கவலையில்லை, கடந்த பத்தாண்டுகளாக சிலாங்கூரில் தெளிவான, வலுவான தலைமைத்துவம் இருந்து வந்துள்ளது.
“மெர்டேகா மையக் கருத்துக்கணிப்பும் எங்களுக்குச் சாதகமாகவே உள்ளது.
“112 இடங்களுக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி புதிய (கூட்டரசு) அரசாங்கத்தை அமைப்போம் என்று நம்புகிறேன்”, என்றாரவர்.
ஆனால், மெர்டேகா மையத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள் அஸ்மினின் நம்பிக்கையுடன் முரண்படுகின்றன. அதன் முடிவுகள் ஆளும் பிஎன் கூட்டணிக்கே சாதகமாக உள்ளன.
மெர்டேகா மையத்தின் கணிப்பு இது. பிஎன்னுக்கு 100 நாடாளுமன்ற இடங்கள், ஹரப்பானுக்கு 83, பாஸுக்கு 2.
அஸ்மின் ஆருடம் சிலாங்கூர் மாநில அரசின் டாருல் ஏஷான் கழக(ஐடிஇ) த்தின் கணிப்பிலிருந்தும்கூட மாறுபடுகிறது.
ஐடிஇ, சிலாங்கூரில் பிஎன் அதற்கு இப்போதுள்ள 12 இடங்களை இரட்டிப்பாக்கிக்கொள்ளும் என்று ஆருடம் கூறியிருந்தது.
சிலாங்கூர் சட்டமன்றம் 56 இடங்களைக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 222 இடங்கள். அரசாங்கம் அமைக்க விரும்பும் கட்சி குறைந்தது 112 இடங்களைப் பெற வேண்டும்.
அஸ்மின் மூன்றாம் தவணையாக கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியிலும் புக்கிட் அந்தாரா பங்சா சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.