இன்று வாக்களிப்பு தொடங்கிய நான்கு மணி நேரத்தில் தேர்தல் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக மூன்று போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.
வாக்குச் சீட்டுகளில் அடையாளக் குறி இருந்ததாக இரண்டு புகார்கள். இன்னொன்று தன் பெயரைப் “பயன்படுத்தி” அடையாளம் தெரியாத ஒருவர் முன்கூட்டியே வாக்களித்து விட்டுச் சென்று விட்டார் என்ற புகார்.
பினாங்கில் வாக்களிக்கச் சென்ற கோ போர் சியோங்கிடம் அவர் ஏற்கனவே வாக்களித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் அவர் வாக்களிக்கவில்லை.
காலை மணி 8.30க்கே ஆயர் ஈத்தாமில் உள்ள கொங் மின் பூசாட் சீனத் தொடக்கநிலைப் பள்ளிக்கு வாக்களிக்கச் சென்ற அங்கு நடந்ததை விவரித்தார்.
“வாக்காளர் பட்டியலில் என் பெயர் அடிக்கப்பட்டிருந்தது. நான் ஏற்கனவே வாக்களித்து விட்டதாக இசி அதிகாரி கூறினார்.
“ஆனால், நான் வாக்களிக்கவில்லை. அதுவரை வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்தேன். வேறு யாரோ என் பெயரைப் பயன்படுத்தி வாக்களித்து விட்டார் எனச் சந்தேகிக்கிறேன்”, என கோ கூறினார்.
இதனிடையே, கோலாலும்பூர் பத்து தொகுதியில், வாக்காளர்கள் முகம்மட் ஷாருல் ரசாலியும் முகம்மட் பைசல் அன்வாரும் அவர்களின் வாக்குச் சீட்டுகளில் வேட்பாளர் பெயருக்கு மேலே ஒரு “புள்ளி” இருந்ததைக் கண்டனர்.
பிஎன் வேட்பாளர் டாக்டர் டொமினிக் லாவ் ஹோ சாயின் பெயருக்கு மேலே அந்தப் புள்ளி இருந்தது.
புதிய வாக்குச்சீட்டுகள் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அதே ‘புள்ளி’ அடையாளம் எல்லாச் சீட்டுகளிலும் காணப்பட்டிருக்கிறது.
“புதிய வாக்குச் சீட்டுகள் இல்லை என்பதால் அந்த வாக்குச்சீட்டையே பயன்படுத்திக்கொள்ளுமாறு சொன்னார்கள்.
“தேர்தல் முகவரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். அவர் போலீசில் புகார் செய்யச் சொன்னார்”, என முகம்மட் ஷருல் கூறினார்.