சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டு தவணை வென்றுள்ள டாக்டர் டி.ஜெயக்குமார் இம்முறை அத்தொகுதி கைமாறக்கூடும் என்று அஞ்சுகிறார்.
எதிரணி வாக்கு சிதறுவதால் ஒரு காலத்தில் முன்னாள் மஇகா தலைவர் ச.சாமிவேலுவின் கோட்டையாக விளங்கிய அத்தொகுதியை பிஎன் மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது என்றாரவர்.
“பிஎஸ்எம் மட்டும் பிஎன்னை எதிர்த்துப் போட்டியிட்டால் எங்களால் வெல்ல முடியும்.
“ஆனால், இப்போது பிகேஆர், பாஸ் ஆகியவையும் களமிறங்கி இருப்பதால் அங்கு வெற்றி பெறுவது கடினமே”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அத்தொகுதியில் ஒரு வேட்பாளரைக் களமிறக்கிய பக்கத்தான் ஹரப்பான் முடிவு ‘விவேகமற்றது’ என்று ஜெயக்குமார் கூறினார்.
பத்து தொகுதியில் சுயேச்சை வேட்பாளரை ஆதரிக்கும் ஹரப்பான் சுங்கை சிப்புட்டில் இரண்டு முறை வெற்றிபெற்ற ஒருவரை ஆதரிக்காதது ஏன் என்பதைத் தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று பிஎஸ்எம் தலைவர் கூறினார்.
பிஎஸ்எம் எப்போதும் பிஎன்னுக்கு எதிராகவும் எதிரணிக்கு ஆதரவாகவுமே இருந்து வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.