பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று காலை சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவை அவரது அரண்மனையில் சென்று கண்டார்.
இரண்டு மணி நேரம் சுல்தானைச் சந்தித்த அஸ்மின் பிற்பகல் 1.50 வாக்கில் அரண்மனையிலிருந்து புறப்பட்டார். புறப்படும்போது, “பின்னர் அறிக்கை விடுப்பேன்”, என்று சொல்லிச் சென்றார்.
காலை 11.50க்கு சிலாங்கூர் அரண்மனை வந்தார் அஸ்மின். அவருடன் சிலாங்கூர் போலீஸ் தலைவர் மஸ்லான் மன்சூரும் வந்தார்.
14வது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் பக்கத்தான் ஹரப்பான் மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றதை அடுத்து அஸ்மின் சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்தார். ஹரப்பான் சிலாங்கூரில் 56 இடங்களில் 51 இடங்களை வென்றது.
அஸ்மின் மேலும் ஒரு தவணை சிலாங்கூர் மந்திரி புசாராக இருப்பாரா அல்லது பக்கத்தான் கூட்டரசு அரசாங்கத்தில் இணைவாரா என்பது இப்போதைக்குத் தெரியவில்லை.
அவர் ஜிஇ14-இல் , கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியிலும் புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலுமே வென்றார்.