மகாதீருக்கு வாழ்த்து தெரிவித்தார் வேள்பாரி, நாட்டை மீட்டெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்

14-வது பொதுத் தேர்தலில் வெற்றி கண்ட பக்காத்தான் ஹராப்பானுக்கும் அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீருக்கும் மஇகா தேசியப் பொருளாளர் எஸ்.வேள்பாரி, வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

மலேசியாகினியிடம் பேசிய அவர், முடிவைக் கண்டு அதிர்ச்சியும் சோகமும் அடைந்தபோதிலும், மக்களுடைய விருப்பத்தை மஇகா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

“மலேசியர்கள் குரல் எழுப்பிவிட்டனர், ஹராப்பானுக்கு அவர்கள் வழங்கிய ஆதரவு மதிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, நாட்டை வழிநடத்துவதற்கு ஹராப்பான் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது, தங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற ஹராப்பானுக்கு மக்கள் அழைப்பு விடுப்பதாக அர்த்தம் என்றார்.

இருப்பினும், அரசியல் கட்சிக்காகப் பிளவுற்றிருக்கும் நாட்டை மீட்டெடுக்குமாறு ஹராப்பான் தலைவர்களுக்கு அந்த மஇகா தலைவர் தனது வேண்டுகோளை விடுத்தார்.

“பிஎன்-இன் உறுப்பினராக இருப்பதால், பிஎன் மற்றும் அதன் தலைவர்களைக் காப்பாற்றுவது என் பொறுப்பாக உள்ளது, இந்த விஷயத்தில் நானும் ஈடுபட்டுள்ளேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இது அரசியலில் சகஜம்.

“எனினும், இப்போது மலேசியர்களை ஒன்றுபடுத்துவதற்கான நேரம், தேவைப்பட்டால், அனைத்து கட்சிகளும் இதில் ஒத்துழைத்து வெற்றிகாணச் செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் மற்றும் தேசியத் துணைத் தலைவர் எஸ்.கே. தேவமணி இருவரும் சிகாமாட் மற்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றங்களில் தோற்கடிக்கப்பட்டனர்.

எனினும், முன்னாள் மஇகா துணைத் தலைவர் எம். சரவணன் மற்றும் மஇகா இளைஞர் பிரிவு தலைவர் சி.சிவராஜ் இருவரும் தாப்பா மற்றும் கேமரன் மலை நாடாளுமன்ற இருக்கைகளை முறையே வென்றனர்.

இந்த வரலாற்றுப் பூர்வமான தேர்தலில், பாரிசானின் மூன்று உறுப்புக்கட்சிகளின் (மஇகா, மசீச, கெராக்கான்) தேசியத் தலைவர்களும் தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.