மக்களின் அதிருப்தியை பிஎன் அற்பமாகப் பார்த்தது, மஇகா தலைவர் கூறுகிறார்

தேசிய முன்னணியின் மீது, மக்கள் கொண்ட அதிருப்தியை அலட்சியப்படுத்தியதே மே 9-ம் தேதி, 14-வது பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடையக் காரணம் என, மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.

நேற்று, ஒரு செய்தி அறிக்கையில், 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 79-ஐ மட்டுமே பிஎன் வென்றது எதிர்பாராதது, அதிர்ச்சியளித்தது என்று அவர் கூறியுள்ளார்.

“நாட்டின் சில பிரச்சினைகள், ஒரு தரப்பு மலேசியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதை அறிந்திருந்தாலும், நாங்கள் அதில் மிகவும் அலட்சியமாக இருந்துவிட்டோம்.

“இந்தத் தேர்தலில் பிஎன்-விரோத அலை என்பது 2008-ம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் சூனாமியைப் போன்றதாகும்,” என்றும் அவர் கூறினார்.

விரக்தியடைந்தாலும், திறந்த மனதுடன் இந்த முடிவை ஏற்றுக்கொள்வது முக்கியம் என்று அவர் கூறினார்.

“எதிர்க்கட்சியாக நாங்கள் பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்றார் அவர்.

“புத்ராஜெயாவைக் கைப்பற்ற வேண்டும் எனும் முயற்சியில், பக்காத்தான் ஹராப்பான் மலேசியர்களுக்குப் பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. அவர்கள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்பதைக் காலம் தீர்மானிக்கும்.

“மலேசியர்கள் ஹராப்பான் மீது அதிக எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர், அதிக நம்பிக்கையை முதலீடு செய்துள்ளனர். மலேசியர்களின் நம்பிக்கையை ஹராப்பான் மதிக்கும் என நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

மூன்று தவணையாக தனது வசமிருந்த சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காக்க தவறியதற்காக அவர் தனது ஏமாற்றத்தையும் தெரிவித்தார்.

கடந்த மூன்று தவணைகளில், மக்களுக்குத் தன்னால் இயன்ற சிறந்த சேவையை வழங்கி வந்ததாக சுப்ரமணியம் கூறினார்.

“நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில், சிகாமாட் மகத்தான உள்கட்டமைப்பு மேம்பாடுகளை அடைந்ததைக் காண முடியும்.

“நான் கற்பனை செய்த, சிகாமாட்டின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கை திட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் போனது எனக்கு வருத்தமளிக்கிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.