டாக்டர் எம்: அன்வாருக்கு அரச மன்னிப்பு வழங்க, அகோங் தயாராக உள்ளார்

யாங் டி-பெர்த்துவான் அகோங், சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

நேற்று இரவு, கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற பதவியேற்பு சடங்கு நிகழ்ச்சியில் அவருக்கு இந்த விஷயம் தெரியவந்ததாக துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் அதற்கு தேவையான நடைமுறைகளை ஆரம்பிக்கும் என மகாதிர் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“ஹராப்பானின் நான்கு உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் பேரரசருடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் போது, எங்களில் ஒருவரிடம் (டிஏபி தலைமைச் செயலாளர் – லிம் குவான் எங்) அன்வாருக்கு உடனடியாக மன்னிப்பு வழங்க தான் தயாராக இருப்பதாகப் பேரரசர் தெரிவித்துள்ளார்,” என்றார் மகாதிர்.

“எனவே, நாங்கள் அன்வார் மன்னிப்பு பெறுவதற்கு முறையான செயல்முறைகளை முன்னெடுப்போம்,” என்று அவர் கூறினார்.

இது அன்வார் மீண்டும் அரசியலுக்குத் திரும்ப வழிவகுக்கும் என்றும் மகாதிர் கூறினார்.

அட்டவணையின் படி, சுங்கை பூலோ சிறையில் இருக்கும் அன்வார், ஜூன் 8-ம் தேதி விடுதலை செய்யப்படலாம்.