மலேசியாவில்  புது  சகாப்தம்  துவக்கம்

 – கி.சீலதாஸ், மே 11, 2018.

கடந்த  எந்தப்  பொதுத் தேர்தலிலும்  காணாத  மாறுபாட்டை,  வித்தியாசத்தை,  புத்துணர்வை  பதினான்காம்  பொதுத் தேர்தலில்  காணமுடிந்தது.  இதுவரையில்  பொதுக்கூட்டம்  என்றால்  தலைநகரில்தான்  மக்களின்  உற்சாகம்  காணப்படும்,  சிறு  நகரங்களில்  அவ்வளவாக  இருக்காது.  இப்பொழுது  அந்த  நிலையில்  அதிசயத்தக்க    மாற்றம்  காணப்படுகிறது.  மக்களின்  உற்சாகம் வித்தியாசத்தைக்  காண  வேண்டும்  என்கின்ற  வேட்கையை  வெளிப்படுத்தியது.  பல்லின  மக்கள்  மனதில்  பலவகையான  வேற்றுமைகளை,  துவேஷ  மனப்பான்மை  களந்த  ஆர்வத்தைக்  காண  முடிந்தது.  இந்த  நல்லுணர்வு,  நல்லிணக்கம்  நீடிக்க  வேண்டும்,  நீடிப்பதற்கான  வழிமுறைகளைக்  காணவேண்டும்.

மலேசியர்கள்  யாவரும்  மதிக்கத்தக்கவர்கள்.  அவர்களிடையே   காணப்படும்  இன,  சமய,  மொழி  பண்பாடு  வேறுபாடுகள்  யாவும்  இயல்பானவை  ஏற்றுக்கொள்ளப்பட   வேண்டியவை,  மதிக்கத்தக்கவை  என்ற  உணர்வை  உறுதிப்படுத்துவதில்தான்  நம்  கவனம்  தேவை.  எனவே,  இங்கே  ஒரு  முக்கியமான  கருத்தைச்  சிந்தையில்  கொண்டிருக்க  வேண்டியது  அவசியமாகும்.

பெருவாரியாகத்  தமிழர்கள்  கலந்துகொள்ளும்  பொது  நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றுபவர்கள்  இந்த  நாட்டின்  வளர்ச்சிக்குத்  தமிழ்  இனத்தின்  பங்கைப்  பற்றி  பேசத்  தவறமாட்டார்கள்.  அவர்களின்  பேச்சைக்  கேட்டால்  இந்த  நாட்டின்  வளத்திற்குத்  தமிழர்களின்  பங்கு  மட்டும்தான்  பிரதானம்  என்ற  எண்ணம்  ஏற்படும்.  தமிழ்  இனத்தின்  பங்கை  குறைத்து  மதிப்பிடமுடியாதுதான்.  ஆனால்,  வரலாற்று  உண்மைகளை  மறக்கக்கூடாது.  ரப்பர்  தோட்டங்களில்  முக்கியப்  பகுதியில்   வேலை  செய்ய  கொண்டுவரப்பட்டவர்கள்  தமிழர்கள்  மட்டும்தான்  என்ற  தவறான  கருத்தைப்  பரப்புவதில்  மிகுந்த  உற்சாகம்  காட்டப்படுவது  வரலாற்று  உண்மையைச்  சரிவர  புரிந்து  கொள்ளாததையே  குறிக்கிறது.

மலாயாவில்  இயற்கை  வளத்தைக்  கவனத்தில்  கொள்ளும்போது,  இங்கே வெள்ளீயம்  வெகுவாகவே  காணப்பட்டது.  அக்காலத்து  மலாய்  குடிமக்கள்  ஆற்றோரங்களில்  வசித்துக்கொண்டிருந்த போது    பழமையான  முறையில்  சேற்றை  வாரி  வெள்ளீயத்தைக்  கழுவி  எடுத்தார்கள்.  அந்தக்காலட்டத்தில்  சீனாவிலும்,  இயற்கையிலேயே  வெள்ளீயம்  தாராளமாகவே  இருந்தது.  அங்கே,  சேறு  வாரும்  முறையில்  முன்னேற்றம்  காணப்பட்டிருந்தது.  எனவே, மலாயாவில்  பெரிய  அளவில்  சுரங்கங்களை  ஆரம்பிக்க  சீனர்கள்  வந்தார்கள்.  மலாயாவில்,  குறிப்பாக  பேராக்,  சிலாங்கூர்  ஆகிய  நாடுகளில்  ஈயச்  சுரங்கங்கள்  ஆரம்பிக்கப்பட்டன.  அங்கு  பெருவாரியான  சீனர்கள்  வேலைக்கு  அமர்த்தப்பட்டனர்.  சீன  மக்கள்  தொகை  பெருகியது.

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய  கம்பெனியின்  பிரதிநிதி  சர் ஃபிரான்சிஸ்  லைட் (Sir  Francis  Light)  பினாங்கு  தீவை 1786ஆம்  ஆண்டு  கெடா  சுல்தானிடம்  இருந்து  பெற்றபோது  அந்தத்  தீவில்  சுமார்  ஆயிரம்  மீனவக்  குடும்பங்கள்  வாழ்ந்துகொண்டிருந்தனர்.  சுமார்  நூறு  ஆண்டுகளுக்குப்  பிறகுதான்  அதாவது  1877இல்  ரப்பர்  தோட்டங்கள்  பெருவாரியாக  ஆரம்பிக்கப்பட்டன.  இதற்குப்  பிறகுதான்  பெருமளவில்  தென்னிந்தியர்களின்  வருகையைக்  காணமுடிகிறது.  தென்னிந்தியர்கள்  எனும்போது  அதில் பெரும்பான்மையினர்  தமிழர்கள்.  தெலுங்கர்களும்,  மலையாளிகளும்  அதில்  அடங்குவர்.

ரப்பர்   தோட்டங்கள்  ஆரம்பிக்கப்பட்டதும்  ஜாவாவில்  இருந்து  வந்த  மக்களும்  ஏராளம்.  ஆகமொத்தத்தில்  ரப்பர்  தோட்டங்களில்  வேலை  பார்க்கும்பொருட்டு  சீன,  இந்தியா,  இந்தோனேஷியா  போன்ற  நாடுகளில்  இருந்து  தொழிலாளர்கள்  கொண்டுவரப்பட்டனர்.  ஒரு  முக்கியமான  வித்தியாசம்  என்னவென்றால்  ஈயச்  சுரங்கங்களில்  வேலை  செய்வதற்கு  சீனர்கள்,   அதாவது  1877ஆம்  ஆண்டுக்கு   முன்னமே  மலாயாவுக்கு  வந்துவிட்டனர்  என்பது  உறுதியாகிறது.

ஒரு சிலர்  இராஜேந்திர  சோழனின்  படையெடுப்பைப்பற்றி  கூறுவார்கள்.  அது  நிகழ்ந்தது  உண்மை.  ஆனால்  அது  ஏன்  நிகழ்ந்தது  என்பதற்கு  சரியான  காரணங்கள்  இதுவரை  உறுதிப்படுத்தப்படாத  ஒரு  புதிராகவே  இருப்பதை  மறுக்க  முடியாது.  அதே  சமயத்தில்  இராஜேந்திர  சோழனின்  படையெடுப்புப்  பற்றி  கே.ஏ.நீலகண்ட  சாஸ்த்திரி  குறிப்பிட்டிருப்பது  பல  அனுமானங்களில்  அதையும்  சேர்த்துக்கொள்ளலாம்.  சாஸ்த்திரி  இரண்டு  காரணங்களை  முன்  வைத்தார்.  ஒன்று,  சோழனின்  தென்கிழக்காசிய  நாடுகளுடனான  வாணிபத்  தொடர்புக்கு  ஸ்ரீவிஜய  ஏற்படுத்திய  தடங்கள்கள்,  அல்லது  இராஜேந்திர  சோழனின்  திக்கு  விஜய  ஆர்வத்தை  நிறைவேற்றும்  தன்மையைக்  கொண்டிருக்கலாம்.  திக்கு  விஜயக்  கோட்பாடானது  பிற  நாடுகளின்  மீது  படையெடுத்து  வெல்லுவதைக்  குறிக்கும்.  எனவே,  இராஜேந்திரனின்  படையெடுப்பு  ஒரு  குறுகிய  நோக்கத்தோடு  ஏற்பட்டிருக்கலாம்.  ஆனால்,  அது  தமிழ்  சமுதாயத்திற்கு  ஒரு  புது  நாட்டை  தரவில்லை.

மலேசியாவின்  வளத்தின்  வளர்ச்சிக்கு  சீனர்கள்  பங்கு  அளவிடமுடியாத  ஒன்றாகும்.  சீனர்களூம்,  இந்தியர்களும்  ஏன்  ஜாவாக்காரர்களும்  இந்த  நாடு  இன்று  கண்டிருக்கும்  வளத்திற்கும்,  வளர்ச்சிக்கும்  உயிரைக்  கொடுத்தார்கள்  என்ற  சரித்திர  உண்மையை  யாவரும்  உணர்ந்து  செயல்பட்டால்  புத்துணர்வு  கொண்ட  மலேசியாவை,  மலேசியர்களைக்  காணலாம். புது  மலேசியாவில்  நல்ல  மலேசிய  உணர்வோடு  உயர்ந்திட  வழி  உண்டு.