‘ஏஜி புத்திசாலியாக இருந்தால் உடனடியாக பணிவிலகல் கடிதம் கொடுக்க வேண்டும்’
கோகிடோ எர்கோ சம்: பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் பலிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என்று கூறினாலும் மக்களுக்குத் துன்பம் விளைவித்த அரசாங்க உயர் அதிகாரிகள் சிலரை விட்டுவிடக்கூடாது.
அவர்கள் தங்கள் அரசியல் எஜமானர்களுக்குச் சாதகமாக சட்டங்களைத் திரித்து நீதியையே கேலிக் கூத்தாக்கி விட்டார்கள். அவர்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும். மக்கள் பக்கத்தான் ஹரப்பானைத் தேர்ந்தெடுத்தற்கு அதுவும் ஒரு காரணம்.
இப்படிப்பட்ட விசயங்களில் மகாதிர் பலே கில்லாடி. பாவம், தவறிழைத்த அதிகாரிகள்.
நெகராவான்: “அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் சட்ட ஆளுமை காக்கப்படும்”. சொன்னவர் சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) முகம்மட் அபாண்டி அலி.
ஆனால், சட்டத்தை மதிக்காதவர் அபாண்டி. 1எம்டிபி சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் அவரே நீதிபதிபோல் செயல்பட்டு சந்தேகத்துக்குரியவர்களைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தார்.
ஏஜியின் கடமை நாட்டுமக்களின் நலன்காப்பது. அவர் 1எம்டிபி வழக்கை நீதிமன்றம் கொண்டு சென்றிருக்க வேண்டும். மற்ற நாடுகள் சட்ட உதவியை நாடியபோது அவர்களுடன் ஒத்துழைத்திருக்க வேண்டும். ஒத்துழைக்கவில்லை.
இதெல்லாம் அவர் கடமையைச் செய்யத் தவறியதற்குச் சான்றுகள்.
பெசாய்கோங்: ஏஜியையும் தேர்தல் ஆணைய(இசி)த் தலைவரையும் உடனடியாக மாற்றுவது புதிய அரசாங்கம் மக்களுக்குச் செய்யும் பெரும் சேவையாக அமையும்.
அது, கூட்டரசு அரசாங்கத்துறைகளில் உள்ள மற்றவர்களுக்கு அவர்கள் அரசியல் எஜமானர்களுக்குச் சேவை செய்வதற்காக அங்கு இல்லை மக்களுக்குச் சேவை செய்யவே இருக்கிறார்கள் என்பதை அழுத்தத் திருத்தமாக வலியுறுத்தும்.
அப்படிப்பட்ட முக்கியமான பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களை வைத்து புதிய அரசாங்கம் எப்படிப்பட்டதாக அமையும் என்பதை முடிவு செய்து விடலாம்.
பெயரிலி 432321505022479: எம்ஏசிசி-யைத் திருத்தி அமைக்க வேண்டும்.
எம்ஏசிசி சிறப்பு நடவடிக்கைப் பிரிவு இயக்குனர் பாஹ்ரி முகம்மட் ஸின்(இப்போது பணி ஓய்வில் உள்ளார்)-னைத் திரும்பக் கொண்டு எஸ்ஆர்சி வழக்கை மறுபடியும் விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்து அதில் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
பெயரிலி 770241447347646: சட்டத்துறை மொத்தத்தையும், ஏஜி அலுவலகம் உள்பட, திருத்தி அமைக்க வேண்டும்.
ஏஜி அலுவலகம் அரசியலுக்கு அப்பாற்பட்டது- அபாண்டி
பெயரிலி _f43360b8: அபாண்டி புத்திசாலியாக இருந்தால், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடனேயே அவர் பதவிவிலகல் கடிதம் கொடுக்க வேண்டும்.
ஏஜி அலுவலகத்தின் மதிப்புக்கு ஏற்ப நடந்து கொள்ளாமல் அதன் பெயரையே கெடுத்து விட்டார்.
ஒற்றை ஆளாக நாட்டின் போக்கையே மாற்றி அமைத்துவிட்டார் அபாண்டி.
அவர் நிறையவே பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
குயிகோன்: இசி-யை விட்டுட முடியுமா. அதில் உள்ள அத்தனை பேரும் பணி விலக வேண்டும்.
ராஜா சோழன்: அபாண்டி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றால் அதைச் சொல்வதற்காக பத்திரிகை அறிவிக்கை விடுவானேன்.
உங்கள் வேலை என்னவோ அதைச் செய்ய வேண்டியதுதானே, ஐயா. யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்?