ஊழல் கூறுகள் இருந்தால், சபா பொதுத் தேர்தல் முடிவுகள் அங்கீகரிக்கப்படாது

மே 9-ம் தேதி, சபாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஊழல் கூறுகள் இருப்பின், அத்தேர்தல் முடிவுகளைப் புத்ராஜெயா அங்கீகரிக்காது எனப் பிரதமர் கூறினார்.

அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில், ஒருதரப்பினரின் கையாளுமை இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதை அரசாங்கம் கண்டறிந்துள்ளது என துன் டாக்டர் மகாதிர் தெரிவித்தார்.

“உதாரணத்திற்கு சபாவில். வாரிசான் 35 இடங்களை வென்றுள்ளது, ஆனால் தேர்தல் ஆணையம் (இசி) வாக்குகளை மீண்டும் எண்ண முற்பட்டு, அக்கட்சி வென்ற இடங்களை 29 ஆக மாற்றியுள்ளது.

“இப்போது அரசாங்கத்தை அமைப்பதில் அவர்களுக்குப் பிரச்சினைகள் எழுந்துள்ளன, ஏனென்றால், சில தரப்பினரை (தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்) பணத்தைக் கொடுத்து (சபாவில்) கட்சி தாவச் செய்யும் முயற்சிகளும் நடந்து வருகிறது,” என அவர் இன்று கோலாலம்பூரில் உள்ள அல்புகாரி அறக்கட்டளையில் நடந்த ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

அரசாங்கம் இதனை ஊழலாகக் கருதுகிறது என்றார் டாக்டர் மகாதிர்.

“கொள்கை அடிப்படையில், மக்கள் பிரதிநிதி கட்சி மாறினால் அதனை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால், பணம் கொடுத்து அவர்களை ‘வாங்குவது’ முறையற்றது.

“இதனைச் சரியான அரசாங்க மாற்றமாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

சபா மாநிலச் சட்டமன்றம் 60 தொகுதிகளைக் கொண்டுள்ளது. பி.என் மற்றும் வாரிசான் இரண்டும் முறையே 29 நாற்காலிகளை வென்றுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், இரண்டு வேட்பாளர்களைக் கொண்டுள்ள, ‘சோலிடரிட்டி தானா ஆயேர்கூ’ கட்சியின் (ஸ்டார்) தலைவர் டாக்டர் ஜெஃப்ரி கிட்டிங்கன் பிஎன்-உடன் ஒத்துழைக்கும் தனது முடிவை அறிவித்தார்.

இது, சிறிய பெரும்பான்மையில் பிஎன் சபா மாநில அரசாங்கத்தை அமைக்க வழிவகுக்கும்.