கர்ப்பால் அங்கிருந்து புன்னகைக்கிறார், குர்மிட் கவுர் கூறுகிறார்

இந்த ஆண்டு, மே மாதம் 10-ஆம் தேதி, முன்னாள் டிஏபி தலைவர் கர்பால் சிங்கின் மனைவி குர்மித் கவுர்க்கு ஒரு சிறப்பான நாள்.

“இந்த நாளில், நாம் அரசாங்கத்தை மாற்றியுள்ளோம். இது வரலாற்று நிகழ்ச்சியாக பதிவாகிவிட்டது, ஒரு புதிய மலேசியா, என் பிறந்த நாளில் பிறந்துள்ளது,” என்று அவர் தனது முகநூலில் கூறியுள்ளார்.

“இந்த நாளில் எனக்கு 70 வயது ஆகிவிட்டது, இது கர்ப்பால் எனக்களித்த மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசாக நான் கருதுகிறேன், ஏனெனில் இன்றைய இந்த வெற்றிக்கு அவரும் பங்காற்றியுள்ளார் என்று எனக்குத் தெரியும்.”

“நாம் வெற்றி பெற்றதற்கு, பக்காத்தான் ஹராப்பான் மற்றும் மக்களின் கடின உழைப்பு மட்டும் காரணமல்ல, இந்தப் பிரச்சாரத்தில் நிச்சயமாக ஓர் ஆன்மீகக் கை நம்முடன் இணைந்திருந்தது என்று, என் உள் உணர்வு சொல்கிறது.”

கடவுள் மர்மமான வழிகளில் வேலை செய்கிறார் என்று குர்மித் சொன்னார். கடவுளுடைய கையில் இருந்து, ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க கர்ப்பால் நாட்டு மக்களைத் தூண்டியுள்ளார்.

நாட்டின் மீது கர்ப்பால் அதீத ஆர்வம் கொண்டிருந்தார் என அவர் சொன்னார்.

“அதற்காக எண்ணிலடங்கா தியாகங்களை அவர் செய்துள்ளார், வீடு திரும்புவதைக் கூட தவிர்த்துள்ளார், இந்த நாட்டைத் தொடர்ந்து நகர்த்துவதற்கு, கடவுளின் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது,” என்றார் அவர்.

கடந்த ஏப்ரல் 17, 2014 அன்று, பேராக் கம்பாரில், கர்ப்பாலுக்கு ஏற்பட்ட துயரமான மரணத்தைக் குர்மித் குறிப்பிட்டார்.

“அவரது ஆசீர்வாதத்துடன், நான் ஜிஇ14 பிரச்சாரத்தில் ஈடுபட்டேன், இன்று நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன், இறுதியில் அவரது பணி நிறைவேற்றப்பட்டுவிட்டது,” என்றார் குர்மித்.

அவரது கூற்றின்படி, கர்ப்பால் அடிக்கடி ‘நாம் விலங்குகளைக் கையாள்கிறோம். கடவுளால் மட்டுமே பிசாசிடமிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும்’ என்பாராம்.

சொர்க்கத்திலிருக்கும் கர்ப்பாலின் தலையீடு இல்லாமல் இது நடந்திருக்காது என்று அவர் சொன்னார்.

“அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

“இறுதியாக, அவரது பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அவரது போராட்டத்தை நான் தொடர, அவர் எங்களை விட்டுச் சென்றது, என் வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது, அந்த வெற்றிடம் எப்போதுமே நிலைத்து இருக்கும்.

“இன்று நான் ஐந்து திறமையான குழந்தைகளுக்குத் தாயாக மட்டுமல்ல, ஒரு மலேசியனாகவும் பெருமிதம் கொள்கிறேன்,” என்றார் குர்மித்.

தனது முகநூல் பதிவின் இறுதியில், தனது பதிவைப் பகிரும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார், காரணம் ‘கர்பால் அங்கிருந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மே 9-ம் தேதி, கர்ப்பால் கட்டியெழுப்ப உதவிய பக்காத்தான் ஹராப்பான், பிஎன்-ஐ வெற்றிகரமாக பின்தள்ளி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கைப் பதவியிலிருந்து விலக்கியது.

அம்னோவிலிருந்து விலகி, பெர்சத்துவை உருவாக்கி, ஹராப்பானுடன் நட்புகொண்டு, 61 ஆண்டு ஆட்சியில் இருந்த பாரிசானை அதிர்ச்சியூட்டும் வகையில் தோற்கடிக்க உதவிய டாக்டர் மகாதிரை, புதிய அரசாங்கம் பிரதமராக நியமித்துள்ளது.