மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஆகியோரை இமிகிரேசன் இலாகா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
இத்தகவல் மலேசியாகினி மேற்கொண்ட ஒரு மாற்று வழியின் மூலமாக இமிகிரரேசன் இலாகாவின் பிரயாண தகுதி விசாரணை அமைவுமுறையிலிருந்து (எஸ்எஸ்பிஐ) பெறப்பட்டது.
ஆனால், இமிகிரேசன் இலாகா தலைமை இயக்குனர் முஸ்தாபா அலி அவர்கள் இருவரும் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை மறுத்தார்.
“இபோதைக்கு கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
நஜிப்பும் அவரது துணைவியாரும் இன்று காலை மணி 10 க்கு சுபாங் விமன நிலையத்திலிருந்து ஜாக்கர்தா ஹலிம் பெர்டானாகுசுமா அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்லவிருந்த திட்டம் கசிந்ததைத் தொடர்ந்து அவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
பிரிமியர்ஏர் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான தனிப்பட்ட ஜெட் விமானத்தில் அவர்கள் செல்லவிருந்தனர்.
இந்த விமான நிறுவனம் பீட்டர் சோன்டாக் என்பவருக்குச் சொந்தமானதாகும். அவர் பிடி ராஜாவாளி கோர்ப்பெரேசன் தலைவருமாவார்.
கடந்த ஆண்டு, இந்த இந்தோனேசிய வணிகர் ஈகல் ஹை பிலான்டேசனின் 37 விழுக்காடு முதலீட்டுப் பங்கை யுஸ்$505.4 மில்லியனுக்கு பெல்டாவுக்கு விற்றது சம்பந்தப்பட்ட பெரும் சர்ச்சையில் சிக்கியவராவார்.