கடந்த 2009, மே18-ம் நாள் இலங்கை அரசு நடத்திய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தங்கள் இன்னுயிரை ஈந்த அப்பாவி பொதுமக்களை நினைவு கோரும் நிகழ்ச்சி, நேற்றிரவு ஜொகூர் பாரு மாநகரில் நடந்தேறியது.
ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஏற்பாட்டில், தொடர்ந்து 9-ம் ஆண்டாக நடந்த இந்த ‘மெழுகுவர்த்தி ஏந்தல் நினைவஞ்சலி’ நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொது மக்கள் இன, மத பாகுபாடின்றி கலந்துகொண்டு; ஈழ மக்களுக்கான தங்கள் ஆதரவைப் பதிவு செய்தனர்.
“போர் முடிந்து 9 ஆண்டுகள் ஆகியும், இன்னும் இலங்கை அரசு கொடூரமான பயங்கரவாத சட்டத்தைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களை அச்சுறுத்தி வருகிறது. காணாமல் போனோரின் நிலை என்னவென்று தெரியாது, அவர்களின் உறவினர்கள் தொடர்ந்து கண்ணீர் போராட்டம் நடத்தி வருகின்றனர், அவர்களின் துயரில் மனித நேயத்துடன் நாமும் இணைந்து கொள்கிறோம்,” என்று ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மு.வீரம்மா தெரிவித்தார்.
“இனப்படுகொலைக்கான ஆதாரங்கள், சாட்சியங்கள் சர்வதேச அளவில் உறுதி செய்யப்பட்டுள்ள போதும், இப்போர் குற்றங்களை சர்வதேசக் குழு விசாரணை நடத்தாமல், குற்றம் சுமத்தப்பட்ட அரசையே விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருப்பது, ஐநா மனித உரிமை அவையில் தமிழருக்கான நீதி மறுக்கப்பட்டதாகவே நாம் உணர்கிறோம்,” என்று அவர் மேலும் சொன்னார்.
“போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்க உலக நாடுகள் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது,” என்று வீரம்மா வருத்தம் தெரிவித்தார்.
ஏற்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி, 5 கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அவை:-
- 2009-ம் ஆண்டு இலங்கை இராணுவம் நடத்திய போர் குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்.
- வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள இலங்கை ஆயுதப் படையினரை முழுவதுமாக விலக்க வேண்டும்.
- தமிழர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தனியார் நிலங்களைத் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்.
- இலங்கை இராணுவத்தால் இரகசிய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
- 2009-க்குப் பின் காணாமல் போனோரின் தகவல்கள் இலங்கை அரசிடம் உள்ளது. அதனை உடனடியாக வெளியிட வேண்டும்.
இந்நிகழ்ச்சியில், மலேசியத் தமிழ் நெறிக்கழகம், ஆயிரத்தில் ஒருவன் நற்பணி மன்றம், ஜொகூர் ஹிண்ராப்ட், ஜொகூர் யெல்லோ பிளேம் (Johor Yellow Flame), மகாகவி முத்தமிழ் கழகம், ஜொகூர் திராவிடக் கழகம், ஜொகூர் மக்கள் நல்வாழ்வு இயக்கம் போன்ற அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.