முன்னாள் பிரதமர் நஜிப்பின் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட சொத்தின் மதிப்பு, பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரி பெர்டினாண்ட் மார்க்கோஸ் மற்றும் அவரது துணைவியார் இமெல்டாவின் சொத்து மதிப்பையும் மிஞ்சும் சாத்தியம் உள்ளது.
“ஓர் அற்புதமான சாதனையை நாம் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன், இமெல்டா மற்றும் மற்றவர்களையும் மீற (சொத்து) வாய்ப்புள்ளது,” என அன்வார் கூறியதாக ஃபைனன்ஸியல் டைம்ஸ் மேற்கோள் காட்டியுள்ளது.
பிஎன் அரசாங்கத்தின் அதிகாரத் துஷ்பிரயோக விகிதம் ‘மிக ஆச்சரியமானதாக இருக்கிறது’; குறிப்பாக, கட்சிச் தலைவர்கள் பலர் ஏழைகளுக்கு உதவி செய்வதாக அதிகம் பேசி வந்துள்ளனர் என்று, பிகேஆர் பொதுத் தலைவர் அன்வார் தெரிவித்தார்.
“அவர்கள் அனைவரும் மனதளவில் கொஞ்சம் காயமடைந்திருப்பார்கள்,” என அந்த முன்னாள் துணைப் பிரதமர் மேலும் கூறினார்.
1எம்டிபி ஊழல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்காக நஜிப்பிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டிருந்தபோது, அன்வாரின் இந்த நேர்காணல் ஒளிபரப்பப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை ஏற்றிச்செல்ல 5 லாரிகள்
கடந்த சில நாட்களாக, புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வு பிரிவினர் நகைகள், பணம், ஆடம்பரக் கைப்பைகள் மற்றும் பல்வேறு சொத்துக்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
கோலாலம்பூர், ஜாலான் லங்கார் டூத்தாவில் உள்ள நஜிப், ரொஸ்மா வீடு மட்டுமல்லாமல், அவர்களுடன் தொடர்புடையதாக நம்பப்படும் பவிலியன் ரெஸிடன்ஸ்சில் இருக்கும் மூன்று ஆடம்பர அடுக்குமாடி வீடுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை- 72 பைகளில் ரொக்கப் பணம், 284 ஆடம்பர, பிராண்டட் கைப்பைகள் – ஏற்றிச் செல்வதற்காக போலிஸ் ஐந்து லாரிகளைப் பயன்படுத்தியது.
காவல்துறையினர், 100 கிலோவுக்கும் அதிகமான தங்கம் மற்றும் 100 மில்லியன் மதிப்புள்ள ரொக்கத்தை அந்த ஆடம்பர அடுக்குமாடி வீடுகளிலிருந்து கைப்பற்றியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், போலிஸ் தரப்பு இதுவரை அதனை உறுதி செய்யவில்லை.
நாடு கடத்தப்பட்டிருந்த போது இறந்துபோனார்
நேர்காணலில் அன்வார் குறிப்பிட்ட மார்கோஸ், பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் முன்னாள் தலைவர், 1986-ஆம் ஆண்டு இறுதியில், மக்கள் எழுச்சியால் அவரது ஆட்சி வீழ்ந்தது.
மார்க்கோஸ் தம்பதியினர், 1965-லிருந்து பிலிப்பைன்ஸ்-ஐ ஆட்சி செய்து வந்தனர்.
88 வயதான இமெல்டா, ஒரு நவநாகரீக பெண்ணாக, தனது ஆடம்பரத்தை வெளிகாட்டிக்கொள்ளும் ஒருவராக வலம் வந்தவர். அவரது கணவர் பிலிப்பைன்ஸின் 10-வது அதிபரான மார்க்கோஸ், 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ல், ஹொனாலுலு, ஹவாய்க்கு நாடு கடத்தப்பட்டிருந்த போது இறந்துபோனார். அவருக்கு அப்போது 72 வயது.
இந்த ஜோடி ஆட்சியில் இருந்தபோது, அரசு சொத்துக்களில் 5-லிருந்து 10 பில்லியனுக்கு இடையிலான அமெரிக்க டாலர்களைக் கொள்ளையடித்து வைத்திருந்ததாகச் சொல்லப்பட்டது.
1எம்டிபி ஊழல் பற்றிய விசாரணை
கடந்த வாரம் புதன்கிழமை தொடக்கம், மலேசியாவை நிர்வகிப்பதற்கான மக்களின் ஆதரவைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து, நஜிப்பின் இல்லத்தில் புக்கிட் அமான் சோதனையை மேற்கொண்டு வருகின்றது.
பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட், 1எம்டிபி ஊழல் பற்றியும் நஜிப்பை விசாரிக்க போலீசாரை அறிவுறுத்தி உள்ளார்.
புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் அமர் சிங் இஸ்ஹார் சிங், புத்ராஜெயாவில் இருக்கும் பிரதமர் அலுவலகத்திலும் தாங்கள் ஆதாரங்களைத் தேடி வருவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, 1எம்டிபியில் இருந்து 731 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் (RM2.9 பில்லியன்) பெற்றுக்கொண்டார் என நஜிப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இருப்பினும், நஜிப் தான் எந்த தவறான நடத்தையிலும் ஊழலிலும் ஈடுபடவில்லை என கூறிவந்தார்.
இதற்கிடையே, எதிர்வரும் மே 22-ம் தேதி, விசாரணைக்காக தங்கள் அலுவலகத்திற்கு வரச்சொல்லி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நஜிப்புக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.