முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தனக்கும் தன் குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக போலிஸ் புகார் செய்துள்ளதாக உள்ளூர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
1எம்டிபி ஊழல் தொடர்பான மோசடி விசாரணையில் ‘சாட்சிகள் பாதுகாப்பு திட்ட’த்தின் கீழ் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டதாகவும் மலாய் மெயில் கூறியுள்ளது.
“நேற்று, மாலை 5 மணியளவில், செந்தூல் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் நஜிப் புகார் அளித்துள்ளார்,” என அச்செய்தி கூறியுள்ளது.
அச்சுறுத்தல்கள் உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் உள்ளதாக நஜிப் தனது புகாரில் கூறியுள்ளதாக தெரிகிறது.
அண்மையில், போலிசார் மேற்கொண்ட சோதனைப் பற்றியும் நஜிப் பேசியதாக மலாய் மெயில் தெரிவித்துள்ளது.
“போலிஸ் புகாரில், அவர் (நஜிப்) புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் போலிஸ் அதிகாரிகள் பொதுத் தேர்தலுக்கு மறுநாள் இரவு, தனது வீட்டிற்கு வந்ததாக கூறினார்.
“தன் வீட்டில் சுமார் 18 மணி நேரம் சோதனை மேற்கொண்ட போலிசார், 1எம்டிபி-க்கு சம்பந்தமே இல்லாத தன்னுடைய பொருள்களையும் தன் மகனுடையப் பொருள்களையும் பறிமுதல் செய்ததாக கூறினார்.
அந்தப் புகாரில், பவிலியன் டவரில் போலிஸ் கைப்பற்றி சென்ற நகை மற்றும் பிற தனிப்பட்ட பொருள்கள் அனைத்தும் நண்பர்கள் அளித்த பரிசுகள் எனவும் நஜிப் கூறியுள்ளார்.
“கைப்பற்றப்பட்ட ரொக்கம், உண்மையில் பொதுத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டது,” என்று அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.
வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற பொருள்களின் பட்டியலையும் போலிசார் கொடுக்கத் தவறியதாக நஜிப் கூறியுள்ளதாக அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.
மேலும், தான் 1எம்டிபி நிறுவனத்தில் ஆலோசகர் மட்டுமே என்றும், முடிவுகள் எடுப்பதில் தான் ஈடுபடுவதில்லை என்றும் அவர் தெரிவித்ததாக அவ்வறிக்கை கூறியுள்ளது.
“அந்தப் போலிஸ் புகாரில், ரிம 2.6 பில்லியன் அராப் சவுடி அரச குடும்பம் தனக்கு அளித்த நன்கொடை என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்,” என மலாய் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
நல்ல நடிகன்!