தங்கள் குடும்பத்தினரைக் கண்ணியம் மற்றும் சுய மரியாதை கொண்ட சாதாரண மக்கள் போல் நடத்த வேண்டுமென முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் கேட்டுக்கொண்டார்.
1எம்டிபி விசாரணையை முடிக்க, அவரது இல்லத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.
“அதிகாலை நேரத்தில் நடந்த சோதனைகளை நான் புரிந்துகொள்கிறேன். எனக்கு புரிகிறது. குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒருநபர் குற்றமற்றவர் என நான் நம்புகிறேன்.
“ஆனால், எங்களை சாதாரண மனிதர்களாக நடத்த வேண்டும். எங்களுக்கும் கௌரவம் இருக்கிறது,” என்று ரோஸ்மா மலாய் மெயில் நேர்காணலில் கூறியுள்ளார்.
அதிகாரிகளின் நடவடிக்கைகளை அவரின் குடும்பம் அமைதியாக எதிர்கொள்ளும் என்றும், ஆனால், விரைவில் அது முடிவடைய வேண்டும் என்றும் ரோஸ்மா கூறினார்.
“நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம், நாங்கள் மிகவும் அமைதியாக உள்ளோம், அரசியல்வாதியின் குடும்பம் என்ற வகையில் அதனை ஏற்றுக்கொள்கிறோம். இது அரசியல் ஆபத்துக்களில் ஏற்படும் சவால்கள் மற்றும் கஷ்டங்களில் ஒன்று.
“இது விரைவில் முடிவடைய வேண்டும், நாங்கள் இயல்பான வாழ்க்கை வாழ விரும்புகிறோம்,” என்று ரோஸ்மா கூறியுள்ளார்.