பிரதமர் துன் மகாதீர், போலீஸ் தடுப்புக்காவலில் மரணங்கள் மற்றும் சித்திரவதைகள் நிறுத்தப்படவேண்டும் என்றும், கைது செய்யபட்டவர்களை முறையாக நடத்த வேண்டும் என்றும், தடுப்புக்காவலில் மரணம் ஏற்பட்டால், முறையான புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கடந்த மே16-ஆம் தேதி கருத்து கூறியிருந்தார்.
அதை ஒட்டி கருத்துரைத்த சுவராம் மனித உரிமை இயக்கத்தின் நிருவாக இயக்குனர், சிவன் துரைசாமி, பிரதமரின் கருத்தை சுவராம் முழுமையாக வரவேற்பதாக கூறினார். அதோடு உடனடியாக விசாரணையின்றி போகா (Prevention of Crime Act 1959 (POCA)) என்ற குற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து இளம் நபர்களையும் விடுவிக்குமாறுகேட்டுக்கொண்டார்.
“தடுப்புக்காவலில் மரணங்கள் மற்றும் சித்திரவதைகளை எதிர்த்து குரல் கொடுத்த சுவராம் இயக்கத்தின் பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு முதன் முறையாக பிரதமர் இப்படி கருத்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது”, என்கிறார் சிவன். மேலும் விவரிக்கையில்;
“கடந்த பொது தேர்தல் முடிவில், நடந்த ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து நாட்டில் பல சீர்த்திருத்தங்களை மக்கள் எதிர்பர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று காவல் துறையின் அதிகார முறைகேடுகள் தொடர்பான பிரச்சனைகளாகும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய அரசாங்கம், உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்”, என்றார்.
“தற்போது எத்தனை பதின்ம வயது சந்தேக நபர்கள் போகா சட்டத்திற்கு கீழ் உள்ளனர் என்பது தெரியவில்லை. எனினும், கடந்த ஆண்டு நவம்பர் மாத நாடாளுமன்ற கேள்வியின்போது முன்னாள் உள்துறை அமைச்சர், ஸாஹிட் ஹமிடி, 142 இளம் சந்தேக நபர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார்”.
“இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கபட்டவர்கள், சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், அவர்கள் குற்றவாளிகள் என்று நிறுபவிக்க அவசியமில்லை.”
“இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அல்லது நீதிமன்றத்தில் நிறுத்தி, குற்றம் சாட்டி வழக்கு தொடர வேண்டும்.”
“போகா சட்டத்தின் கீழ் இவர்களை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதும், EMD எனும் மின்கண்காணிப்பு கருவியை பயன்படுத்தி அவர்களை கட்டுபடுத்தப்பட்ட குடியிருப்பில் தொடர்ந்து வைத்திருப்பது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது.”
“இப்படிபட்ட நீதிமன்ற விசாரணை இல்லாத தடுப்பு காவல் சட்டங்கள் மனித உரிமைக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானவை”, என்கிறார் சிவன்.
பதின்ம வயதினருக்கு இதில் நீதி உடனடியாக வேண்டும். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பிரதமரும் உள்துறை அமைச்சரும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார் சிவன்.
உங்கள் பிள்ளைகள் POCA தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தால், சுவாரம் நிறுவனத்தை 03-79545725 என்ற தொலைபேசி வழி தொடர்புக் கொள்ளுமாறு சிவன் கேட்டுக்கொண்டார்.