பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் மற்றும் வணிகர் பாங் லி கூன் ஆகியோருக்கு எதிராக இன்று தொடங்கவிருந்த ஊழல் வழக்கு தள்ளிப்போடப் போடப்பட்டுள்ளது.
குவான் எங் மற்றும் கோபிந்த் சிங் டியோ ஆகிய இருவரும் முறையே நிதி அமைச்சராகவும் தொடர்புகள் மற்றும் பல்லூடக அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கு இன்று புத்ரா ஜெயாவில் இருப்பதால், இவ்வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்கும்படி குவான் எங்கின் வழக்குரைஞர் ராம்கர்பால் சிங் நீதிபதியைக் கேட்டுக்கொண்டார்.
இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. தற்போதைய சட்டத்துறை தலைவரின் (ஏஜி) பதவிக் காலம் ஜூலையில் முடிவுக்கு வருகிறது. நாங்கள் புதிய ஏஜி இவ்வழக்கை நடத்துவதை விரும்புகிறோம் என்று ராம் கர்பால் உயர்நீதிமன்ற நீதிபதி ஹதாரியா சைட் இஸ்மாயிலிடம் இன்று ஜோர்ஜ் டவுனில் கூறினார்.
பாங்ஙின் வழக்குரைஞர் வி. சிதம்பரமும் அதே போன்ற வேண்டுகோளை விடுத்தார்.
தாங்கள் புதிய ஆவணங்களை சாட்சியமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாங்ஙின் வழக்குரைஞர் கூறியபடி புதிய ஆவணங்களை தாம் இன்னும் பெறவில்லை என்று அரசு தரப்பு வழக்குரைஞர் மாஸ்ரி செ டாவுட் நீதிபதியிடம் கூறினார்.
இரு தரப்பு விவாதங்களையும் செவி மடுத்த நீதிபதி வழக்கு பரிபாலனத்திற்கு ஜூலை 30 ஆம் தேதியை நிர்ணயித்தார்.