1எம்டிபி சிறப்புப் பணிப்படை; முன்னாள் ஏஜி கனி திரும்பி வந்துள்ளார்

 

1எம்டிபி ஊழலை விசாரிக்கவும், தவறு செய்தவர்கள் மீது வழக்குத் தொடரவும், சம்பந்தப்பட்ட சொத்துகளை மீட்கவும் பிரதமர் மகாதிர் ஒரு சிறப்புப் பணிப்படையை அமைத்துள்ளார்.

அச்சிறப்பு பணிப்படைக்கு முன்னாள் ஏஜி அப்துல் கனி பட்டேல், முன்னாள் எம்எசிசி தலைவர் அபு காசிம் முகம்மட், தற்போதைய எம்எசிசி தலைவர் முகமட் ஸுகிரி அப்துல் மற்றும் முன்னாள் துப்பறிவுப் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் ஆகியோர் கூட்டுத் தலைவர்களாக இருப்பர் என்று பிரதமர் அலுவலகம் இன்று மதியம் அறிவித்தது.

அந்த சிறப்பு பணிப்படையில் எம்எசிசி, ஏஜி அலுவலகம், போலீஸ் படை மற்றும் பேங்க் நெகாரா ஆகிய அமைப்புகளின் அதிகாரிகள், மற்றும் இது சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நுண்ணறிவு பெற்றுள்ள வழக்குரைஞர்களும் இடம் பெற்றிருப்பர்.

அந்த சிறப்புக் குழு விசாரணைகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும், முதலீடு செய்யப்பட்டிருக்கும் 1எம்டிபி சொத்துகளைக் கண்டுபிடித்து அவற்றை திரும்பிப் பெறுதல் ஆகிய நடவடிக்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கும் என்று அந்த அறிக்கை கூறிற்று.

அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து, சிங்கப்பூர் கனடா மற்றும் இதர நாடுகளிலிருந்து உதவிகளைப் பெறும் பொறுப்பையும் இக்குழு கொண்டுள்ளது.

அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பணிப்படை நாட்டிற்குச் சொந்தமான பணத்தை மீட்டெடுப்பதுடன் நாட்டின் பெருமையை மீண்டும் நிலைநிறுத்தும் என்று நம்புவதாக பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது.

இந்தச் சிறப்புப் பணிப்படையின் நான்கு தலைவர்களும் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு 1எம்டிபி பற்றி 2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட விசாரணையில் பங்கேற்றிருந்தவர்கள்.