இன்று, பிரதமர் துன் டாக்டர் மகாதிர் உடனான தனது இரண்டாவது சந்திப்பு குறித்து, பெட்ரோ சவுடி தகவல் வழங்குநர், சேவியர் ஜஸ்டோ விரிவாக கருத்துரைக்க மறுத்துவிட்டார்.
எனினும், அந்த சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர், 92 வயது தலைவரைச் சந்தித்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
“எங்கள் சந்திப்பு பற்றி நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். உங்கள் பிரதமரைச் சந்தித்தது என் நினைவில் எப்போதும் இருக்கும் எனச் சொல்ல விரும்புகிறேன்.
“அவரது வழிகாட்டுதலின் கீழ், மலேசியா வெற்றியை நோக்கி நகரும்,” என மலேசியாகினி தொடர்புகொண்டபோது அவர் தெரிவித்தார்.
முன்னதாக, புத்ராஜெயாவில் ஏறக்குறைய ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் ஜஸ்டோ – மகாதிர் சந்திப்பு நிகழ்ந்தது. நேற்று, செர்டாங்கில் இருக்கும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், சுமார் ஒரு மணி நேரம் இருவரும் சந்தித்து பேசினர்.
அமெரிக்க நீதித்துறையின் கூற்றுப்படி, 1எம்டிபி நிதிகள் திசை திருப்பட்டதாக நம்பப்படும் 4 பிரிவுகளில், ‘பெட்ரோ சவுடி’ முதல் கட்டமாகும்.
இந்தக் கட்டத்தில், குறைந்தபட்சம் 1.03 பில்லியன் அமெரிக்க டாலர் 2009 மற்றும் 2011-க்கும் இடையில் தொழிலதிபர் லோ தேக் ஜோவுக்குச் சொந்தமான குட் ஸ்டார் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.
ஜஸ்டோவிடம் இருந்து கசிந்த தகவல்களின் அடிப்படையில், இந்தப் பரிவர்த்தனைகளை முதலில் வெளியிட்ட தரப்பு சரவாக் ரிப்போர்ட் ஆகும்.
2015-ல், கைது செய்யப்பட்டு, 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படும் முன்னர், தனது முன்னாள் முதலாளியை மிரட்டினார் என்ற குற்றச்சாட்டிற்காக, தாய்லாந்தில் இருக்கும் பெட்ரோ சவுடி அதிகாரிகள் சேவியரைத் தேடிவந்தனர்.
எனினும், 2016-ல் ஜஸ்டோ அரச மன்னிப்பைப் பெற்றார். 1எம்டிபி ஊழல் இப்போது சர்வதேச விசாரணையை எதிர்கொண்டுள்ளது.