முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனியும் எம்ஏசிசியும் 2015 ஆகஸ்டில் அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக குற்றஞ்சாட்ட முடிவு செய்திருந்ததாகக் கூறியிருப்பதை முன்னாள் பிரதமரின் வழக்குரைஞர்கள் சாடியுள்ளனர்.
முன்னாள் பிரதமரின் வாக்குமூலம் பதிவு செய்யாமலும் அவர்மீதான விசாரணையை முடிக்காமலும் அவருக்கு எதிராக வழக்கு தொடுப்பது எப்படிச் சாத்தியமாகும் என்றவர்கள் வினவியதாக நஜிப் வழக்குரைஞர்களுக்கு நெருக்கமான வட்டாரமொன்று மலேசியாகினியிடம் தெரிவித்தது.
மே 15ஆம் நாள் வெளிவந்த செய்திகளை அவ்வட்டாரம் சுட்டிக்காட்டியது. அச்செய்திகளில் அந்த ஆண்டு (2015) நஜிப்மீது வழக்கு தொடுக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அதற்குமுன் பதவியிலிருந்ந்து தூக்கப்பட்டதாகவும் கனி பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் தெரிவித்திருந்தார்.
அதேபோன்று, எம்ஏசிசி தலைமை ஆணையர் முகம்மட் ஷுக்ரி அப்துல் நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் எம்ஏசிசி-யும் கனியும் நஜிப்புக்கு எதிராக குற்றம்சாட்ட ஏற்பாடுகள் செய்திருந்ததாகக் கூறியிருப்பதையும் அவ்வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
“அந்த நேரத்தில் நஜிப்பிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுமில்லை”, என்று கூறிய அவ்வட்டாரம் ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யாமல் அரசுத்தரப்பு அவருக்கு எதிராக எப்படிக் குற்றஞ்சாட்ட முடியும் என்று வினவியது.
நஜிப்பின் வழக்குரைஞர்கள், நேற்று ஷுக்ரி எல்லாவற்றையும் அம்பலப்படுத்தும் செய்தியாளர் கூட்டம் நடத்தியது முறையாகுமா என்றும் வினவினர்.
“அவர் கூறியவை எங்கள் கட்சிக்காரருக்குப் பாதகமானவை. அவர் சொன்னது உண்மையோ இல்லையோ அவர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. அங்கு அவரை யாரும் குறுக்குவிசாரணை செய்ய முடியாது, ஏனென்றால் அவர் பேசியது செய்தியாளர் கூட்டத்தில், நீதிமன்றத்தில் அல்ல. அவர் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொண்டார்”, என்றவர்கள் கூறினார்கள்.
2015 ஆகஸ்டில் எம்ஏசிசி வெலியிட்ட அறிக்கை ஒன்று அது 1எம்டிபிமீது விசாரணை செய்யவில்லை என்றும் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் குறித்துத்தான் விசாரணை செய்வதாகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதையும் நஜிப் வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டினர்.
அந்த அறிக்கை, 1எம்டிபி விவகாரம்மீது போலீஸ் விசாரணை செய்வதாகவும் தெரிவித்திருந்தது. அப்படியிருக்க, ஷுக்ரி இப்போது ஏதோ எம்ஏசிசிதான் 1எம்டிபிமீது விசாரணை நடத்தியதுபோலக் குறிப்பிடுவது எப்படிச் சரியாகும்.
மேலும், அந்த எம்ஏசிசி அறிக்கை, ரிம2.6பில்லியன் மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த நன்கொடை என்பதைக் காண்பிக்கும் நான்கு கடிதங்கள் ஒரு வங்கியிடமிருந்து கிடைக்கப்பெற்றதாகவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால், நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் சவூதி இளவரசரால் நன்கொடை கொடுத்ததற்கு ஆதாரங்களைக் காண்பிக்க முடியவில்லை என்று ஷுக்ரி கூறினார்.
இது முரண்பாடான உள்ளதே என்று அவ்வட்டாரம் கூறிற்று.
மூத்த வழக்குரைஞர் பல்ஜிட் சிங் சித்து அவர்களும் ஷுக்ரி நேற்று செய்தியாளர் கூட்டத்தில் அத்தனை விவரங்களையும் போட்டுடைத்தது முறையாகுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“விவகாரத்தை ஆட்சியாளர் மன்றத்துக்குக் கொண்டு சென்றதையும் இன்னும் பல தகவல்களையும் அவர் அங்கு வெளியிட்டது நடப்பு விசாரணையைப் பாதிக்கலாம்.
“விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அத்தகவல்கள் உண்மையோ, பொய்யோ நீதிமன்றத்தில்தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும், ஊடகங்களிடம் சொல்லக்கூடாது”, என்று பல்ஜிட் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.