பெவிலியன் ரெசிடென்சில் கைப்பற்றப்பட்ட பணம் இன்னும் எண்ணி முடிக்கப்படவில்லை

கடந்த   வெள்ளிக்கிழமை    பெவிலியன்   ரெசிடென்ஸ்   கொண்டோமினியத்தில்    பறிமுதல்   செய்யப்பட்ட    பணத்தைக்   கணக்கிடும்   பணி  இன்னும்   முடிவுக்கு    வரவில்லை   என   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்   போலீஸ்    முகம்மட்   பூஸி  ஹருன்   த  ஸ்டாரிடம்   இன்று     தெரிவித்தார்.

புக்கிட்   அமான்  வணிகக்  குற்றப்  புலனாய்வுத்  துறை (சிசிஐடி)   மே  21  அதிகாலையில்  பணத்தை    எண்ணத்   தொடங்கியது   என்று   ஒரு   வட்டாரம்  தெரிவித்தது.

இன்னும்   எவ்வளவு   பணம்   எண்ணப்பட  வேண்டியுள்ளது    என்பது   உறுதியாக    தெரியவில்லை,    ஆனால்  சிசிஐடி    அதிகாரிகள்     பேங்க்   நெகரா    போன்ற   அரசுத்துறைகளின்    உதவியுடன்   கைப்பற்றப்பட்டவற்றை  இன்னும்  கணக்கிட்டுக்   கொண்டிருப்பதாக    அந்த   நாளேடு   கூறிற்று.

“பல   நாட்டு    நோட்டுகள்   உள்ளன   என்பதால்   கணக்கிடுவது   சிரமமாக  உள்ளது. ஒவ்வொரு  நோட்டின்    எண் வரிசையையும்   பதிவு    செய்ய   வேண்டியுள்ளது”,  என்று  ஒரு   வட்டாரம்    தெரிவித்தது.

கடந்த   வெள்ளிக்கிழமை   போலீசார்   முன்னாள்   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்குடன்    தொடர்புள்ள   இரண்டு   கொண்டோமினியத்திலிருந்து    72பைகளில்  பணம்,  நகைகள்   ஆகியவற்றையும்   284  அட்டைப்  பெட்டிகளில்  ஆடம்பர   கைப்பைகளையும்   எடுத்துச்   சென்றனர்.

போலீசார்   நஜிப்புடன்   தொடர்புள்ள     மொத்தம்   ஆறு  வீடுகளில்    அதிரடிச்   சோதனை    நடத்தியுள்ளனர்.  அவற்றில்   ஒன்றுதான்   பெவிலியன்   ரெசிடென்ஸ் .  கோலாலும்பூரில்   ஜாலான்  லங்காக்  டுட்டாவில்  உள்ள  நஜிப்பின்  இல்லத்திலும்   ஸ்ரீ  பெர்டானாவிலும்கூட   சோதனைகள்   நடந்துள்ளன.