அரசாங்க அமைப்புகளான ஸ்பாட், ஜாசா, ஜேகேகேகேபி, பெமாண்டு, என்பிசி எல்லாம் தொலைந்தன

 

ஐந்து அரசாங்க அமைப்புகள் மற்றும் குழுக்கள் – தேசிய பேராசிரியர்கள் மன்றம் (என்பிசி), பெடரல் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்பு குழுக்கள் (ஜேகேகேகேபி), பிரதமர்துறையின் செயற்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல் பிரிவு (பெமாண்டு), சிறப்பு விவகாரங்கள் இலாகா (ஜாசா) மற்றும் தரைப் பொதுப் போக்குவரத்து ஆணையம் (ஸ்பாட்) கலைக்கப்பட்டு விட்டன என்று பிரதமர் மகாதிர் இன்று அறிவித்தார்.

இன்று நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் மகாதிர் செய்தியாளர்கள் கூட்டத்தில் இதை அறிவித்தார்.

ஜேகேகேகேபியில் அரசியல் அதிகமாகி விட்டது. அதன் பணிகளை இதர அரசாங்க இலாகாகள் மேகொள்ளலாம்.

அவ்வாறே, என்பிசியும் அரசாங்கத்திற்கு கல்வி சார்ந்த தகவல்கள் அளிப்பதற்கு மாறாக பழைய பிஎன் அரசாங்கத்திற்கு துணை போகும் அரசியல் அமைப்பாக மாறி விட்டது.

அது மீண்டும் உயிர்ப்பிக்கப்படுமா என்பது சந்தேகமே என்றாரவர்.

ஸ்பாட்டின் பொறுப்புகளை போக்குவரத்து அமைச்சு எடுத்துக்கொள்ளும் என்று கூறிய மகாதிர், முந்தைய பிஎன் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பல ஆலோசனை வழங்கும் அமைப்புகள் கலைக்கப்படுவது பற்றியும் அரசாங்கம் சிந்திக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

அதோடு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கால் தொடங்கப்பட்ட பல திட்டங்களை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்றார்.

இதில், கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவிரைவு இரெயில் பாதை, கிழக்குக் கடற்கரை இரயில் இணைப்பு (இசிஆர்எல்) மற்றும் பண்டார் மலேசியா ஆகியவை அடங்கும்.